இது பிரபாகரன் வாரம்.. – புகழேந்தி தங்கராஜ்

546 0

pugalenthy-iyaa-277x147இந்த வாரம் பிரபாகரனின் வாரம். பிரபாகரனின் வாரம் – என்றால் புலிகளின் வாரம். ‘பிரபாகரனின் மன உறுதி வியக்க வைப்பது’ – என்று சிங்கள ராணுவத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்ன கொடுத்த வாக்குமூலத்தில் தொடங்கி ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க எந்த முகாந்திரமும் இல்லை’ என்று ஐரோப்பிய சமூக நாடுகளின் நீதிமன்றத்துக்கு அதன் தலைமை வழக்கறிஞரே எடுத்துக் கூறியிருப்பதோடு முடிந்திருக்கிறது இந்த வாரம்.

இருக்கிற பரபரப்பு போதாதென்று ‘மறைந்திருக்கும் பிரபாகரன் வெளியே வரப்போகிறார்’ என்கிற திடீர்ப் பரபரப்பு வேறு. எந்த அடிப்படையில் அந்தச் செய்தி வெளியானது என்பது எனக்கும் தெரியவில்லை.

உள்ளபடியே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் எவரையும் உளமார நேசிப்பவன் நான். வள்ளுவனில் தொடங்கி காசி ஆனந்தன் வரையிலான நிஜமான படைப்பாளிகளைப் போற்றுவதே சுருக்கெனப் பாய்ந்து சுளுக்கெடுக்கிற அவர்களது சிக்கனத் தமிழுக்காகத்தான்! இந்த விஷயத்தில் வள்ளுவன் கஞ்சனென்றால் காசி ஆனந்தன் மகா கஞ்சன். முன்னவர் வார்த்தைகளைச் சுருக்குவதோடு நின்றுவிடுவார். பின்னவரோ அதை நறுக்காமல் விடமாட்டார்.

காசி ஆனந்தன் நறுக்கியதையெல்லாம் மறக்காமலிருந்தாலே போதும்…. பேசிப் பேசியே ஊசிப் போய்விடும் தமிழினம் எந்த அழிவிலிருந்தும் மீண்டு எழுந்துவிடும். தமிழினத்தின் அடையாளமாகவே ஆகிவிட்ட விடுதலைப் புலிகள் பேச்சுக் கச்சேரியா நடத்திக் கொண்டிருந்தார்கள்?

பிரபாகரன் வெளியே வரப்போகிறார் – என்ற செய்தியைப் படித்ததும் காசி ஆனந்தனின் நறுக்கு தான் நினைவுக்கு வந்தது. ‘நிறைவாகும் வரை மறைவாக இரு’ என்பது அவரது குரலிலேயே ஒலித்தது என் செவிகளில்! நிறைவாகும் வரை புலி மறைவாகத்தான் இருக்கும் – என்று நான் நம்புவது இந்த நறுக்கின் அடிப்படையில்தான்!

ஆதரவாளர்களின் அவசரத்தைக் காட்டிலும் எதிரியின் கணிப்பே பலசமயங்களில் சரியாக இருக்கிறது. பிரபாகரன் நிதானமாகவும் பொறுமையாகவும் காய் நகர்த்தி வெல்பவர் – என்கிற கமல் குணரட்னவின் கணிப்பு துல்லியமானது. எதற்காகப் பதுங்கவேண்டும் எதுவரை பதுங்கவேண்டும் எப்போது வெளிப்படவேண்டும் – என்பதையெல்லாம் பிரபாகரனுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. இதையெல்லாம் அறியாமலா பௌத்த சிங்களப் பூதங்களிடமிருந்து 30 ஆண்டுகள் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்க முடிந்தது புலிகளால்!

‘பிரபாகரனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய குணங்கள் பல! ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் தான் இருந்தது மட்டுமின்றி தனது தோழர்களும் இயக்கமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். எங்களுக்கு இணையான ஓர்மமும் அர்ப்பணிப்பும் அவரிடம் இருந்தன. உறுதியான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் அவர் வல்லவர்’ என்பது கமலின் வெளிப்படையான கருத்து.

நந்திக்கடல் நடவடிக்கையை மேற்கொண்ட சிங்கள ராணுவத்தின் 53வது பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக இருந்த கமல் சர்வநிச்சயமாக ஒரு போர்க்குற்றவாளி… இனப்படுகொலையில் பங்காளி. இப்போதுகூட ‘போர்க்களத்தில் என்ன நடந்ததென்கிற ரகசியங்கள் என்னோடு சேர்த்து என் கல்லறையில் புதைக்கப்பட்டுவிடும்’ என்று சீன் போடுபவர். அவராலேயே கூட பிரபாகரனின் அப்பழுக்கற்ற தன்மையை மறைக்கவோ மறுக்கவோ முடியவில்லை.

‘வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட பிரபாகரனின் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட புகைப்படங்களை நாங்கள் வைத்திருந்தோம். எந்தப் புகைப்படத்திலும் ஆல்கஹால் வாடை கூட இல்லை’ என்பது கமல் கொடுக்கிற சான்றிதழ்.

மதுவிலேயே மூழ்கிக் கிடந்த ஒரு பொறுக்கி ராணுவத்துக்குத் தலைமையேற்று நடத்தியதை ஒப்புக்கொள்கிற நேர்மை இல்லாவிட்டாலும் எதிர்த்து நின்ற ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் ஒழுக்கத்தைப் போற்றுகிற தன்மை கமலுக்கு இருக்கிறது.

கமலின் இந்தப் பாராட்டு காலம் கடந்தது. ஹரிஹரனின் புலனாய்வுப் பிரிவு பொய்களை மட்டுமே விதைத்துக் கொண்டிருந்த 1980களின் இறுதியிலேயே ஹரிஹரனை நம்பாமல் புலிகளின் ஒழுக்கத்துக்காகவே அவர்களை நேசித்த இந்திய அமைதி காப்புப் படை அதிகாரிகள் பலர். அதனால்தான் பிரபாகரனைச் சுட்டுக்கொல்லும்படி உத்தரவிடுவது பிரதமர் ராஜீவ்காந்திதான் – என்பதை அறிந்த பிறகும் பொறுப்பற்ற அந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்தார்கள்.

இப்போது கமல் சொல்வதற்கும் 2009ல் கமலின் எஜமானனான ஜெகதலப்பிரதாபன் கோதபாய செய்ததற்கும் சம்பந்தமேயில்லை. 2009 ஏப்ரலில் பிரபாகரனின் பதுங்குக்குழி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்றும் அந்தப் பங்கருக்குள் மதுபான பாட்டில்களும் குப்பிகளும் இருந்தன என்றும் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டான் கோதபாய. ‘பிரபாவை விட்டு விலகவே மாட்டோம்’ என்று அந்த மானுடனைத் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருந்த ஒரு மனித சமுத்திரத்தில் விஷத்தைக் கலக்கிற விஷமம் அது.

கோயபல்ஸ் கோதபாய வெளியிட்ட அந்தப் போலிப் புகைப்படங்களை ஊடக தர்மத்துக்கு விரோதமாக இந்தியாவின் ஆகப் பெரிய தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. அது கோதபாய செய்ததைக் காட்டிலும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பிரபாகரன் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் சேற்றைவாரி இறைப்பதில் நமது தேசிய ஊடகங்கள் போட்டி போட்டுக்கொண்டு செயற்பட்டு வருவதற்கு அந்தச் சம்பவம் இன்னொரு உதாரணம்.

பிரபாகரனையும் புலிகளையும் உயிருக்குயிராக நேசிக்கும் வைகோவின் அறச்சீற்றத்துக்கும் அந்தச் சம்பவம் எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் அதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஊடகங்களில் அந்தப் பச்சைத் துரோகம் அரங்கேற்றப்பட்ட மறுநாள் அதுகுறித்து மிகுந்த வேதனையுடன் பேசினார் வைகோ. ‘இப்படியொரு பச்சைப் பொய்யை ஆங்கில ஊடகங்கள் பொறுப்பேயில்லாமல் செய்தியாக்கலாமா’ என்று அவர் கேட்டபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அவரைப்பற்றி அவதூறுகள் பரப்பப்பட்டபோதுகூட அந்த அளவுக்கு அவர் வேதனைப்பட்டு நான் பார்த்ததில்லை.

அடுத்த ஓரிரு நாட்களில் சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் அருகில் இனப்படுகொலையைக் கண்டிக்கும் பேரணி. பிரபாகரன் தொடர்பான போலிப் புகைப்படங்களைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய ஆங்கில ஊடகங்களின் செய்தியாளர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னால் நின்றிருந்தனர். மேடையில் ஏறும்போதே அவர்களைக் கவனித்த வைகோவின் முகம் மாறிவிட்டது.

பத்திரிகையாளர்களாயிற்றே நமது செய்திகளை அவர்கள் புறக்கணித்தால் என்ன செய்வது – என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கவில்லை வைகோ. பிரபாகரன் தொடர்பான பொய்யான செய்தியை ஒளிபரப்பிய ஆங்கிலக் காட்சி ஊடகங்களின் பெயர்களை பகிரங்கமாகப் பட்டியலிட்ட அவர் அந்த ஊடகங்கள் செய்த பச்சைத் துரோகத்தைக் கடுமையாகச் சாடினார்.

‘பிரபாகரனை உங்களுக்குத் தெரியாதா? அந்த மனிதனின் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நீங்கள் அறிந்ததே இல்லையா? அதெல்லாம் தெரிந்தும் இப்படி ஒரு இட்டுக்கட்டப்பட செய்தியையும் போலிப் புகைப்படங்களையும் எப்படி வெளியிடுகிறீர்கள்?’ என்று ஆவேசமான ஆங்கிலத்தில் வைகோ பொறிந்து தள்ளியபோது அந்தச் செய்தியாளர்கள் மட்டுமல்ல அத்தனைச் செய்தியாளர்களும் தலைகுனிய நேர்ந்தது.

வைகோவின் அந்தச் சினம் ஓர் இனத்துக்கு நியாயம் கேட்ட நேர்மையான சினம். அறச் சினம். இன்றைக்கும் நான் அவர் மீது வைத்திருக்கிற அபிப்பிராயத்துக்குக் காரணமான சினம். சினம் கொள்ளாதவன் பிணம் – என்று சொன்னவர் யாரென நினைவில்லாவிட்டாலும் அந்த நியாயமான வாதத்தை நான் ஒருபோதும் மறந்ததில்லை.

இலங்கை ராணுவம் – விடுதலைப் புலிகள் என்று இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகப் பொய் விற்றுப் பிழைக்கிற ஊடகங்கள் ஊடக நண்பர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஒரே ஒரு சிங்களப் பெண்ணையாவது புலிகள் அவமதித்தார்கள் – என்று அந்த நண்பர்களாலேயே கூட விரல் நீட்ட முடியாது. தாய்ப்புலியாய்த் திகழ்ந்த பிரபாகரனின் செம்மையான வழிகாட்டுதல் அப்படி!

புலிகளின் இந்த மேன்மையான மென்முகத்தை அறிமுகப்படுத்தாமல் அவர்களை அசிங்கப்படுத்துவதிலேயே குறியாயிருக்கும் ஊடகங்களின் பின்னணியில் ஹரிஹ-ரா போன்ற எண்ணற்ற அயோக்கியர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் கமல் குணரட்ன சொன்னதைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும்.

இப்போது இவ்வளவு சொன்னாலும் பிரபாகரன் என்கிற நேர்மையான போராளி குறித்து பேசுகிற யோக்கியதை கமலுக்குக் கிடையவே கிடையாது. பிரபாகரனின் புகைப்படங்களில் மதுவின் வாடை கூட கிடையாது – என்று இப்போது சிலாகிப்பவர் ‘பிரபாகரனின் பங்கரில் மதுக் குப்பிகள்’ என்கிற திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்தில் கோதபாய இறங்கியபோது என்ன கிழித்துக் கொண்டிருந்தார்?

கமல் இப்படியெல்லாம் பேசியிருப்பது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற இந்த மாதத்தின் (2016 செப்டம்பர்) முதல் வாரத்தில் தான்! ஓய்வுபெற்ற மறுநாளே ROAD TO NANDIKADAL (நந்திக் கடலுக்கான பாதை) என்கிற நூலை வெளியிட்டார் கமல். 20 நாடுகளின் தயவில் சிங்கள ராணுவம் பெற்ற ஒரு பினாமி வெற்றிக்கு உரிமை கொண்டாட கோதபாயவில் ஆரம்பித்து ஒரு கும்பலே கிடக்கிறது கொழும்பில்! அடுத்தவன் குழந்தைக்குத் தனது இனிஷியலைப் போட வெட்கமேயில்லாமல் போட்டி போடுகிற ஜென்மங்கள் அவை. தனது நூலின் மூலம் அந்தப் பட்டியலில் பத்தோடு ஒன்று பதினொன்றாக இணைந்திருக்கிறார் கமல்.

கமல் புத்தகத்தின் வெளியீட்டு விழா அவர் படித்த கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடந்தது. விழாவின் சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீமான் மகிந்த ராஜபக்சவும் கோதபாயவும்! ‘சக ராணுவத் தளபதிகள் விழ்ழவில் கலந்துகொள்ளவில்லை இது 35 ஆண்டுகளை ராணுவத்துக்காக அர்ப்பணித்த கமலுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ – என்று ஐலாண்ட் நாளேடு ஒப்பாரி வைத்திருக்கிறது. எல்லாப் போர்க்குற்றவாளிகளும் ஒரே மேடையில் நிற்கவேண்டும் – என்று அந்தப் பத்திரிகை ஆசைப்படுகிறதோ என்னவோ!

தனிப்பட்ட அரசியல் செயற்பாட்டாளரான முகம்மது பாசில் மட்டும்தான் கொழும்பு டெலிகிராப் இதழ் மூலம் கமலின் புத்தகம் தொடர்பில் தாறுமாறான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

‘எதற்காக இந்தப் புத்தகம்? போர் ரகசியங்களை வெளியிடவே முடியாது – என்று அறிவிக்கும் நீ வேறு எதைத் தெரிவிக்க நூல் எழுதுகிறாய்? போதிய ஆயுதபலமில்லாத பத்தாயிரம் புலிகளை வீழ்த்த மிகையான ஆயுதங்களுடன் 3 லட்சம் பேர் போரிட்டது எந்த வகையில் வீரச்சமர்? அந்த 3 லட்சம் பேர் எந்த விதத்தில் மாவீரர்கள்? சொந்தச் சகோதரர்களான அப்பாவித் தமிழ்மக்களைக் கொன்று குவித்ததற்குப் பெயர்தான் தேச பக்தியா? அப்பாவி மக்கள் செத்த ஒரு போரைப் புத்தகமாக்கி காசு பண்ணப் பார்க்கிறாயா அரசியல் செய்யப் பார்க்கிறாயா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாசில்.

பாசிலின் கட்டுரைக்கு வாசகர்களிடையே பலத்த வரவேற்பு. ‘அடுத்தவரிடமிருந்து இரவல் வாங்கிய ஒரு செயற்கையான போலியான வெற்றியை நாம் கொண்டாடுவது மகா கேவலம்’ என்பது ஒரு வாசகரின் நேரடித் தாக்குதல். ‘மகாவம்சத்துக்கு அடுத்த மெகா காமெடி கமல் புத்தகம்தான்’ என்பது இன்னொரு வாசகரின் நக்கல்.

இந்தக் கூத்தெல்லாம் கொழும்பில் தொடர்ந்துகொண்டிருக்க அமெரிக்கா போன அதிபர் மைத்திரிபாலா ‘2017க்குள் ஏழ்மையிலிருந்து இலங்கை விடுபட்டுவிடும்’ என்று ஐ.நா. சபையில் வாய்கிழியப் பேசியிருக்கிறார். ‘இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த இணங்காவிட்டால் 2017க்கு முன்பே இலங்கையின் பிடியிலிருந்து ஈழம் விடுபட்டு விடும்’ என்பதை மகாகனம் பொருந்திய சம்பந்தராவது மைத்திரிக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமா?

ஐநாவில் மைத்திரி பேசிய அதே நாளில்தான் ஐரோப்பிய சமூக நாடுகளின் நீதிமன்றத்துக்கு – ‘புலிகள் மீதான தடையை நீடிப்பது நியாயமில்லை’ என்று எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இது சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம். தனித் தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரத்தை எளிதில் பெறுவதற்கான வழி.

புலிகள் பற்றியும் பிரபாகரன் பற்றியும் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகள் நீர்த்து வருவது மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. நிச்சயமாக இது புலிகளின் வாரம் பிரபாகரனின் வாரம்.

பின்குறிப்பு (ஓவியர் வீர.சந்தானத்துக்காக…): இந்த வாரம் மட்டுமில்லை இந்த மாதம் கூட பிரபாகரனின் மாதம் தான்! ‘அண்ணா’ என்று அன்போடு விளித்து கலைஞருக்குப் பிரபாகரன் எழுதிய கடிதத்தை செப்டம்பர் 15ல்தான் வெளியிட்டிருக்கிறார் வைகோ. அந்தக் கடிதம் வெளிப்படையாகப் பேசுகிற பொருளைக் காட்டிலும் அதில் உறைந்திருக்கிற மறைபொருள் அதிகம். கோபாலபுரத்துக் கற்சிலையை நிச்சயமாக அது கலங்கவைத்திருக்கும். (கனிமொழி சுப.வீ. கே.எஸ்.ஆர். போன்ற எழுத்தாளர்களுக்கு நிச்சயமாக இது புரிந்திருக்கும்.)

பிரபாகரன் என்கிற அந்த அப்பழுக்கற்ற மனிதன் கவியரசர் கண்ணதாசனின் பாடல் ஒன்றை நேசித்து நேசித்துப் பாடிய பழைய வரலாற்றைக் கேட்டுக் கேட்டுச் சிலிர்த்ததும் இந்த மாதத்தில்தான்!

அந்தக் கடிதம் குறித்தும் இந்தப் பாடல் குறித்தும் அடுத்த இதழில் நிச்சயம் எழுதுவேன் என்று இந்த இனத்துக்காகவே சுவாசித்துக் கொண்டிருக்கும் மூத்த ஓவியர் – அண்ணன் வீர.சந்தானத்துக்கு உறுதியளிக்கிறேன்.
புகழேந்தி தங்கராஜ்