தேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு – அதிகாரி தகவல்

248 0

குன்னூர் ஏல மையத்தில் நடைபெறும் 46-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி கூறினார்.

நீலகிரி மாவட்ட தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலம் ஆன்லைன் மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த 6-ந் தேதி கொண்டாடப்பட்டது. 7-ந் தேதி வடமாநிலங்களில் கொண்டாடப்பட்டது. இதனால் வடமாநில வர்த்தகர்களின் பங்களிப்பு இருக்காது என்பதால், கடந்த 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 45-வது ஏலம் ரத்து செய்யப்பட்டது. எனவே வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் 46-வது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு 17 லட்சத்து 86 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

குன்னூர் ஏல மையத்தில் 46-வது ஏலம் 15 நாட்கள் கழித்து நடைபெற உள்ளது. இதனால் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 44-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் சராசரி விலையாக கிலோவுக்கு 97 ரூபாய் 44 பைசாவாக இருந்தது.

இது 43-வது ஏலத்தை ஒப்பிடும்போது 4 ரூபாய் கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் சராசரி விலை 79 ரூபாய் 59 பைசாவாக இருந்தது. இதனை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 44-வது ஏலத்தில் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாத 2-வது வாரம் முதல் மார்ச் மாத இறுதி வாரம் வரை பனி காலம் என்பதால் தேயிலை மகசூல் குறையும். இதனால் தேயிலை தொழிற்சாலைகள் இயங்க கடினமாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு முதல் முறையாக வடமாநிலங்களில் பனி காலத்தில் தேயிலை உற்பத்தியை நிறுத்த தேயிலை வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கு வடமாநிலங்களில் தரமற்ற தேயிலையை உற்பத்தி செய்து, சந்தையில் விற்பனை செய்வது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே வடமாநிலங்களில் இருந்து நல்ல தேயிலையும், எதிர்பார்த்த அளவும் அடுத்த ஆண்டு(2019) ஏப்ரல் மாதம் தான் சந்தைக்கு வரும். இதனால் வடமாநில தேயிலைத்தூளின் வரத்து அடுத்த மாதம்(டிசம்பர்) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்காது. இதன் காரணமாக வட இந்திய தேயிலை வர்த்தகர்கள் தென்னிந்திய தேயிலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் நிலை ஏற்படும். எனவே 46-வது ஏலத்தில் வடஇந்திய வர்த்தகர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்து, தேயிலைத்தூளுக்கு விலை உயர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment