பதுளையில் தங்க நகை விற்பனை நிலையமொன்றில் தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி நயந்த சமரதுங்க உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்கமையைச் சேர்ந்த அனோமா ஜயந்தி என்ற 39 வயது நிரம்பிய பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவராவார்.
பதுளை மாநகரின் தங்கநகை விற்பனை நிலையமொன்றில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் தோரணையில் அங்கு சென்ற குறித்த பெண் 56 தோடுகள் 10 மோதிரங்கள் ஆகியவற்றைத் திருடித் தமது கைப்பைக்குள் போட்டுக்கொண்டு வெளியேறியுள்ளார்.
அவ் வர்த்தக நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கெமரா மூலம் மேற்படித் திருட்டு தெரிய வந்ததையடுத்து பதுளைப் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் குறிப்பிட்ட பெண்ணை தேடி வந்தனர். சி.சி.டி.வி. கெமரா பதிவுகள் அனைத்தும் பதுளைப் பொலிஸ் நிலையத்திற்கும் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பதுளைப் பொலிஸார் மேற்கொண்ட துரித புலன் விசாரணைகளின் பேரில் குறிப்பிட்ட பெண் ஹொரணை என்ற இடத்தில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து விரைந்த பொலிஸார் குறிப்பிட்ட பெண்ணைக் கைது செய்தனர்.
அப் பெண்ணின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் திருடப்பட்டதாக கருதப்படும் தங்க நகைகளில் 34 தோடுகள் மற்றும் ஆறு தங்க மோதிரங்கள் ஆகியனவற்றையும் பொலிஸார் மீட்டனர்.
பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட பெண்ணை பதுளைப் பொலிஸார் இன்று ஆஜர் செய்ததும் நீதிபதி அப்பெண்ணை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
திருடப்பட்டதாக கருதப்பட்டு மீட்கப்பட்ட தங்க நகைகளின் ஒரு பிரிவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

