ஜனாதிபதி, சர்வதேசத்திடம் பாரிய அவப்பெயரை பெற்றுள்ளார் – மங்கள

180 0

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு வந்தோம். ஆனால் அவரினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை அவரே மீறியவராக சர்வதேசத்தின் மத்தியில் பாரியதொரு அவப்பெயரைப் பெற்றுள்ளார்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தெற்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த நிலையில் நேற்று நள்ளிரவுடன் தனது நிறைவேற்றதிகாரத்தினைப் பயன்படுத்தி ஜனாதிபதி பாராளுமன்றத்தினைக் கலைத்தார்.

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“பாராளுமன்றத்தினைக் கலைத்தாலும், எமது பெரும்பான்மையினை மக்களிடம் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். மேலும் பாராளுமன்றம், நீதிமன்றம், மற்றும் தேர்தல் ஆகியவற்றில் அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் ஏற்புடைய வகையில் எமது பெரும்பான்மைப் பலத்தினையும், எம்பக்கமுள்ள நியாயத்தினையும் நிரூபிப்பதற்கும் தயார் நிலையில் உள்ளோம்.

நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஒவ்வொரு பிரஜையும் எம்முடன் இணைந்து போராடுவார்கள்.” என்றார்.

Leave a comment