நித்தகைக்குளம் உடைப்பு ,ஒரு குடும்பத்தைக் காணவில்லை

267 0

தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது.

இதனால் ஒரு குடும்பத்தினர் காணமல் போயுள்ளதுடன், பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.

பல வருடங்கள் பயன்பாடின்றி காணப்பட்ட குறித்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முனபதாகவே மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மேலும் அறிய வருகையில்.

நித்தகைக்குளம் மற்றும் அதனோடு இணைந்த வயல் நிலங்கள் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்பட்டுவந்துள்ளது.

அத்துடன் மீள் குடியமர்த்தப்பட்ட பிற்பாடு இந்த குளம் மற்றும் அதனோடு சேர்ந்த பகுதிகளை வன இலாகா திணைக்களத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்துள்ளனர். இந் நிலையில் அந்த பகுதி விவசாய மக்கள் குறித்த குளத்தினையும், 2100 க்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களையும் விடுவித்துத் தரும்படி அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் கோரியிருந்தனர். இதன் விளைவாக குளம் மற்றும் 1000 ஏக்கர் வயல் நிலங்களையும் வன இலாகாவினர் விடுவித்திருந்தனர்.

மேலும் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பயன்பாடின்றி காணப்பட்ட இந்த குளத்தின் மறுசீரமைப்பு வேலைகள் இவ்வருட முற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.

இதற்காக வடமாகாண விவசாய அமைச்சின் ஊடாக உரூபாய் 15மில்லியன் ஒதுக்கப்பட்டு, முல்லைத்தீவு நீர்பாசன திணைக்களத்தினர் குளத்தின் மறு சீரமைப்பு வேலைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் குறித்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குளக்கட்டை சுற்றி காணப்பட்ட காடுகள் அகற்றப்பட்டதுடன், கலிங்கி, துருசு, முறிவடைந்த நிலையில் காணப்பட்ட கட்டின் பகுதி என்பன மறு சீரமைப்புச் செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக வேலைகள் அனைத்தும் முடிவுற்றிருந்தன.

இந் நிலையில் தற்போது பெய்துவரும் பலத்த பருவப்பெயர்ச்சி மழையின் காரணமாக குளத்தில் பாரியளவு நீர் தேங்கியிருந்தது. அத்துடன் 2018.11.07 நேற்றைய தினம் மாலை குளத்தில் 9.5அடி நீ்ர் குளத்தில் காணப்பட்டதாகவும், இரவு பெய்த கன மழையுடன் நீர் மட்டம் 15அடிக்கு மேல் அதிகரித்ததால் குளத்தின் கட்டு உடைப்பெடுத்திருக்கலாம் எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment