ஜனாதிபதியின் பொறுமையை ஐக்கிய தேசியக் கட்சி உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த தீர்மானம்!

222 0

தேசிய அரசாங்கத்தை வீழ்த்தியதும், ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்ததும் நல்லாட்சியில் செய்யத துரோகமாக கருத வேண்டாம். நல்லாட்சியை ஆதரித்த மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமே இதுவென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஜனாதிபதியின் பொறுமையை ஐக்கிய தேசியக் கட்சி உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த தீர்மானம் எனவும் அக்கட்சி கூறியது.

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இந்தக் கருத்தினை முன்வைத்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக் ஷவும் பிளவுபடுவார்கள் என கூறப்பட்டு வந்த போதிலும் இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்துவிட்டது.

பெரும்பான்மை உறுப்பினர்களை உருவாக்கிவிட்டோம். கட்சியை இணைப்பது கட்சியின் ஆரோக்கியம் மட்டும் அல்லாது இந்த நாட்டின் தேவைக்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். அவசியமான நேரத்தில் இவ்வாறான ஒரு மாற்றம் வேண்டும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது, வாழ்வாதார நிலைமைகள் மோசமானதாகிவிட்டது. மத்திய வங்கி ஊழல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரிய அளவில் வீழ்த்திவிட்டது. அதையும் தாண்டி நாட்டின் ஜனாதிபதியையே கொலை செய்து அந்த இடத்தை அடைய ஐக்கிய தேசியக் கட்சி செய்த சூழ்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது நாட்டினை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டுசெல்லும். ஆகவே தான் ஜனாதிபதி உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்தார்.

Leave a comment