ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது – சுமந்திரன்

277 0

ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி புதியதொரு பிரதமரை நியமித்ததும் இருந்த பிரதமரை நீக்கியதும் பாராளுமன்றத்தை கூட்டாது அதனை ஒத்திவைத்துள்ளதும் சட்டவிரோதமான செயற்பாடென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பிரச்சினை பாராளுமன்றத்தினால் மாத்திரமே தீர்க்க முடியும். ஆகவே பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கூரலில் பாராளுமன்றத்தை காலந்தாழ்த்தாது உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து வருமாறு,

இன்று கூட்டப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான கூட்டமல்ல. நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இங்கு வரவில்லை.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்த கட்சிகளை சபாநாயகர் இன்று அழைத்திருந்தார்.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாறாக ஜனாதிபதி கடந்த 26 ஆம் திகதி புதியதொரு பிரதமரை நியமித்ததும் இருந்த பிரதம மந்திரியை நீக்கியதும் சட்டவிரோதமானது என்றும் பாராளுமன்றத்தை கூட்டாது பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததும் சட்டவிரோதமான செயற்பாடு. ஆகையினாலே உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு நாங்கள் ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம். இதன் போது நாங்கள் எவருக்கு ஆதரவு என்ற தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியினுடைய செயல் சட்டவிரோதமானது. குறித்த பிரச்சினை பாராளுமன்றத்தினால் மாத்திரமே தீர்க்க முடியும். ஆகவே பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு நாங்கள் கோரியிருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்று கேட்டதற்கு,

நாங்கள் அதில் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. எடுக்க வேண்டிய நேரத்தில் நாங்கள் எடுப்போம் என்றார்.

தற்போது நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலை கூட்டமைப்பொறுத்தவரையில், ஜனாதிபதியின் சட்டவிரோதமான நடவடிக்கையினால் தான் இந்த சூழல் தோன்றியுள்ளது. நாட்டில் மோசமான தொரு அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். தீர்க்கப்பட வேண்டுமானால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment