மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள ஒப்படைக்க வேண்டும்!

5119 0

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரால் எமது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள ஒப்படைக்க வேண்டும் என்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நல்லூர் ஸ்தான சி.சித.க. பாடசாலையில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரின் ஏற்பாட்டில் மரபுரிமை மையம் திறந்துவைக்கப்பட்டது. வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மரபுரிமை மையத்தைத் திறந்திருந்தார். இந்தநிலையில் மரபுரிமை மையத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பாடசாலை அதிபர் வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விண்ணம் செய்துள்ளார்.

எம்முடன் கலந்துரையாடியமைக்கு மாறாக மரபுரிமை மையம் ஒன்றை இயங்குவதற்காகப் பெயர் பலகை நடப்பட்டு திறப்பு விழா ஒன்று நடத்தப்பட்டது. பாடசாலையில் கலாசார அடையாளமான யாஃநல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலை எனும் பெயரை வர்ணம் பூசி அழித்தமை ஆசியரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் மத்தியில் மிக ஆழ்ந்த மனவேதனையை உண்டாக்கியுள்ளது.

விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றது. மரபுரிமைப் பொருள்களைப் பதுகாப்பதற்கான பெட்டிகள் ஆசிரியர் வாகனத் தரிப்பிடத்தில் அடுக்கப்பட்டுள்ளதால் மழை காலத்தில் வாகனத் தரிப்பிடம் இல்லாது ஆசிரியர்கள் பெரும் விசனமடைகின்றனர்.

கட்டடத்தின் கூரைப் பகுதியில் இருந்து கழற்றப்பட்ட உடைந்த ஓடுகள், உக்கிய தடிகள் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், நுளம்பு பெருக ஏதுவாகவும் உள்ளன.

இவற்றுக்கான தீர்வை உடன் பெற்றுத் தர வேண்டும் என்று கோருவதுடன், மாணவர்களின் கல்விக்கு அத்தியாவசியமாகவுள்ள மண்டபத்தை எக்காரணம் கொண்டும் மரபுரிமை மையத்துக்கு வழங்க முடியாது என்பதைத் தயவாக அறியத் தருவதுடன், இந்த மையத்தை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகம் சார்பாகக் கோருகின்றேன் என்று பாடசாலை அதிபர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரைக் கேட்டபோது இது தொடர்பாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது. மரபுரிமை மையம் அமைப்பதற்கு எம்மால் முத்துத்தம்பி வித்தியாலயத்தில் உள்ள கட்டடம் ஒன்றே பரிந்துரைக்கப்பட்டது. இறுதி நேரத்தில் மாகாணக் கல்வி அமைச்சரால் இந்தப் படசாலை தெரிவு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்க்க முயற்சிக்கின்றோம்.- என்றார்.

Leave a comment