வடகிழக்கு மாகாணங்களில் கல் வீடமைப்பு பணிகளை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பது தொடர்பான ஒப்பந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சர், மனோகணேசனின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டும் இரண்டு வாரங்களாக அது கிடப்பில் கிடந்துள்ளதாக, வீடமைப்புச் செயலணியின் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமைதான் அந்த ஒப்பந்த வரைவு கிடைத்ததாகவும், அது அமைச்சு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
25 ஆயிரம் கல்வீடுகளை வடகிழக்கு மாகாணங்களில் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அமைச்சு மாற்றங்களால் அந்தத் திட்டத்தை முன்னெடுப்பது தாமதமானது. இது தொடர்பில் நீண்ட இழுபறி ஏற்பட்டு வடகிழக்கு மாகாண செயலணி ஊடாக அதனை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தச் செயலணி ஏற்கனவே இரண்டு தடவைகள் கூடியுள்ள நிலையில், நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை மூன்றாவது கூட்டம் இடம்பெற்றது. 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தத்தை ஐ.நா. முகவர் அமைப்புக்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிக் கருத்துக் கேட்கப்படவேண்டும்.
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்புவதற்காக மனோகணேசனின் அமைச்சுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வீடமைப்புச் செயலணியின் கூட்டத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், வரைபு தயாரான விடயம் தனக்குத் தெரியாது என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.உடனடியாக அதனை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோகணேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது . கடந்த வெள்ளிக்கிழமைதான் அந்த வீட்டுத்திட்ட ஒப்பந்தச் சட்ட வரைவு எனக்கு கிடைத்தது. அது எனது அமைச்சு அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு நேற்று(நேற்றுமுன்தினம்) சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டது என்றார்.

