எமது நாட்டில் பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் தற்போது இல்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (24) ´கமே பன்சல கமட சவிய´ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ´கட்சி அரசியலினாலேயே எமது தேசம் கீழ்நிலைக்கு சென்றுள்ளது. தற்போது எமது அரசாங்கம் பிரதான இரு கட்சிகளின் இணக்கப்பாட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றுவது சாதாரண விடயமாகும். எனினும் இவற்றை நிவர்த்தி செய்யும் பொறுப்பு ஜனாதிபதியையும் பிரதமரையும் சாரும்.
இரண்டு கட்சியையும் ஒன்று சேர்த்து அரசாங்கத்தை நடத்தவே மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர். இந்த மக்கள் ஆணைக்கு எதிராக சிலர் செயற்படுவாராயின் அது நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கும் செயலாகும். இதனை தடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிற்கும் பிரதமருக்கும் உரியதாகும்.
வருகின்ற காலப்பகுதியிலும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் எமது நாட்டை எம்மால் அபிவிருத்தி செய்யமுடியும். ஆனால் பல அரசியல் வாதிகள் எம்மை பிரிக்கவே முயல்கின்றனர்.
பண்டாரநாயகவின் இலங்கை சுதந்திர கட்சியும், டி.எஸ் சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் இன்று எம் மத்தியில் இல்லை. காலத்துக்கு காலம் கட்சிகளும் மாறுகின்றன.
மக்கள் நலன்சார்ந்த கொள்கையை கொண்டதாக அரசியல் கட்சிகள் காணப்படவேண்டும். மேலும் தேசத் தலைவர்களை முன்னோடிகளாகக் கொண்டு கட்சிகள் செயற்படவேண்டும். ஆனால் கட்சி அரசியலினால் இன்று எமது நாடு கீழ் நோக்கி செல்கின்றது.
மக்கள் ஆணை கிடைக்காத கில அரசியல் தலைவர்கள் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று கட்சிகளை பிளவுபடுத்துகின்றனர். ஒவ்வொருவரும் அதிகாரத்திற்காக சண்டைபோடுகின்றனர் என்று நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டை நிர்வகிக்க முடியுமோ அப்போது தான் எமது தேசம் முழுமையாக அபிவிருத்தியடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

