நாட்டில் மாகாணசபை முறைமை வலுவிழந்துள்ளது -வசந்த சேனாநாயக்க

185 0

நாட்டில் மாகாணசபை முறைமை என்பது வலுவிழந்த முறையொன்றாக மாற்றம் கண்டுள்ளது. மாகாண சபைக்கான தேர்தல்கள் உரிய காலப்பகுதியில் நடத்தப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பிவந்த அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் தற்போது மௌனித்துள்ளனர். இதிலிருந்தே அனைத்துத் தரப்பினரும் மாகாணசபை முறைமையின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வினைத்திறனற்ற மாகாணசபை முறைமைக்குப் பதிலாக, சிறுபான்மையின மக்களினதும் சுயாதீனத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டசபை முறைமை அமுல்செய்யப்பட வேண்டும்.

சிறுபான்மையின மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் அவர்களின் உரிமைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான சுயாதீனத்துவம், உட்கட்டமைப்பு மற்றும் உள்ளக அபிவிருத்திக்கான அதிகாரங்கள் என்பன பெற்றுக் கொடுக்கப்படும் என்பதுடன், முகாமைத்துவ ரீதியில் வினைத்திறன் மிக்க முறையொன்றாகவும் அமையும் என்றார்.

மாகாணசபை முறைமைக்குப் பதிலாக மாவட்டசபை முறைமையினை நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள இராஜாங்க அமைச்சர், இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment