அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலை சூத்திரம் என்னவென்பது தனக்கு விளங்குவதில்லையெனவும் எமது நாட்டுக்கு இவ்வாறான சூத்திரம் அவசியமற்றது எனவும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற நிcழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நிதி அமைச்சர் நேற்று (18) அறிமுகம் செய்த சூத்திரத்தினால் எதனை முன்வைக்க விரும்புகிறார் என்பது கூட விளங்க முடியாமல் இருக்கின்றது. எமது நாட்டுக்கு சூத்திரமல்ல அவசியமானது. எரிபொருளுக்கான செலவு எவ்வளது? எரிபொருள் விற்பனை விலை என்ன? இந்த இரண்டுக்கும் இடையில் அரசாங்கத்துக்கு எவ்வளவு வரியை அறவிட முடிகின்றது என்பது தான் விலையை தீர்மானிப்பதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் செயற்படுவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையிலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படாத வகையிலும் விலைகளை நிர்ணயிக்கும் முறையை உருவாக்குவது போதுமானது. தான் அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் எழ வில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

