பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள்-

361 0

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு நியூலி சூ மார்ன் தமிழ்ச் சங்கம் நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை மாணவர்களிடையே நடாத்திய இல்லமெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 13.10.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போட்டி நடுவர் திருமதி செல்வகுமார் வரதா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை பூநகரி தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கப்டன் திலகர் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சுக் கொடியினை நியூலி சூ மார்ன் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. தங்கத்துரை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, சங்கக் கொடியினை தமிழ்ச்சோலை நிர்வாகி திருமதி குணரட்ணம் கோமதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

சமநேரத்தில் இல்லக் கொடிகளை ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் சுடரினை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் இராஜலிங்கம் அவர்களிடமிருந்து விளையாட்டு வீர வீராங்கனைகள் பெற்று மைதானத்தைச் சுற்றிவந்து ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது.
வீரர்களுக்கான உறுதிப் பிரமாணத்தைத் தொடர்ந்து நடுவர்களுக்கான உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
பிரதம விருந்தினர்கள், பிரமுகர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்க, இல்ல மாணவர்களின் அணிவகுப்பு மைதானத்தை வலம்வந்தது. இது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

தொடர்ந்து வாகை , காந்தள் , செண்பகம் ஆகிய இல்லங்களிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன. அத்துடன் விநோத உடை நிகழ்விலும் மாணவர்கள் சிறப்பாகப் பங்குபற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வின் நிறைவாக விருந்தினர்கள் மற்றும் பிரமுகர்களால் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், பதக்கங்களும் அணிவித்து வைக்கப்பட்டன.

கொடிகள் இறக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்ததைத் தொடர்ந்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு கண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Leave a comment