சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடி படையினர்! – பந்துல ஜயசிங்க

198 0

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் விசேட அதிரடி படையினரை கடமைகளில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். 

சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவிருந்த இத்திட்டம் விசேட அதிரடி படையினருக்காக காவல் அரண்கள் அமைக்கப்படாமையினால் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் விசேட அதிரடி படையினரின் இணைக்கப்படுவது தொடர்பில் வினவுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெறுவதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை குறித்து அவதானம் செலுத்தியுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சானது சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பணிகளில் விசேட அதிரடி படையினரை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் காணப்படும் புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் சிறைக்குள் இடம்பெறும் செயல்கள் குறித்து ஆராயவும் நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரமுண்டு. ஆனால் சிறைக்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

எனவே தான் இந்த திட்டத்துக்குள் நாம் விசேட அதிரடி படையினரின் உதவியை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அந்தவகையில் வெலிகடை சிறைச்சாலை, மகஸின் சிறைச்சாலை, அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலை மற்றும் கொழும்பு சிறைச்சாலை என நான்கு சிறைச்சாலைகளுக்கே தற்போது விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படவுள்ளன.

Leave a comment