நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையைப் பாதிக்கும் வகையிலும், மக்கள் ஆணைக்கு எதிராகவும் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க மாட்டார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்துக் கதைத்துக் கொள்வது பாரியதொரு பிரச்சினையல்ல. நாட்டின் தேசியப் பிரச்சினைகளை அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசிக் கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடிக்கடி சந்திப்புக்களை மேற்கொண்டு கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.
இந்த தேசிய அரசாங்கத்தினால் நல்ல பல விடயங்கள் நாட்டுக்கு ஆற்றப்பட்டுள்ளன. அதேபோன்று குறைபாடுகளும் உள்ளன. அவற்றைச் சரிசெய்து கொண்டு 2020 வரை இந்த அரசாங்கம் பயணிக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

