விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள் – ஐங்கரநேசன்

323 0

02-1வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் உயர் பதவிகளில் பத்து வருடங்களின் பின்னர் தமிழர்கள் இருக்க மாட்டார்கள். இந்தப் பதவிகளில் சிங்களவர்கள் அமர்வதற்கேற்ற வகையில், அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அங்கு அவர் உரையாற்றிய போது,விவசாயத் திணைக்களத்தில் மாகாண விவசாயப் பணிப்பாளராகப் பதவி வகிப்போர் இலங்கை விவசாய சேவையில் தரம் ஒன்று தகுதி நிலையைக் கொண்டிருக்க வேண்டும். வடக்கு விவசாயத் திணைக்களத்தில் இப்போது இரண்டு பேர் மாத்திரமே தரம் ஒன்று தகுதியைக் கொண்டிருக்கின்றனர். இன்னும் பத்து வருடங்களுக்குள் இவர்கள் ஓய்வு பெற்றுச் சென்று விடுவார்கள். இவர்களின் இடத்தை நிரப்பத் தமிழர்கள் ஒருவரும் இல்லை.

மாவட்ட ரீதியாகப் பிரதி விவசாயப் பணிப்பாளராகப் பணியாற்றுபவர்கள் இலங்கை விவசாய சேவையில் குறைந்த பட்சம் தரம் மூன்று தகுதியைக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள், தரம் ஒன்று தகுதியைப் பெறுவதற்கு 18 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால், இந்தத் தரம் மூன்று தகுதியைக் கொண்ட தமிழர்கள் கூட எங்களிடம் தேவையான அளவுக்கு இல்லை.

கடந்த பல வருடங்களாக இலங்கை விவசாயச் சேவைப் பரீட்சைக்குத் தோற்றிய தமிழர்கள் எவரும் சித்தி அடையவில்லை என்பதே இதற்கான காரணம். திறமை வாய்ந்த பலர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள். ஆனால், தேசியரீதியில் இவர்களால் போட்டிபோட முடியவில்லையென்று சொல்லப்படுகிறது. உண்மையில், சிங்கள அதிகாரிகள் நியமனம் பெறுவதற்காகத் தமிழர்கள் நேர்முகப் பரீட்சையின்போது தேர்வாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை நிர்வாக சேவையில் 2001ஆம் ஆண்டு வடக்கு கிழக்குக்கு எனத் தனியாகவொரு பரீட்சை நடாத்தப்பட்டு 60 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இதனால்தான் வடக்கு மாகாணத்தின் நிர்வாக சேவையில் இன்று தமிழர்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. இலங்கை விவசாய சேவையிலும் இதேபோன்று வடக்குக் கிழக்குக்கு என்று தனியானதொரு பரீட்சையை நடாத்தித் தமிழ் பேசும் மக்களைத் தேர்வு செய்யுமாறு தற்போதைய அரசாங்கத்திடமும் பலதடவை கேட்டு விட்டோம். ஆனால், அரசாங்கம் எமது கோரிக்கையைச் செவிமடுக்கத் தொடர்ந்தும் மறுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலன், பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கநாதன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் யோ.கமலேஸ்வரி, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.செபமாலை, விதைகள், நடுகைப் பொருட்கள் பிரதி விவசாயப் பணிபாளர் ப.சத்தியமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.