சிங்களவர்களினால் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லையாம் – அகுரடியே நந்த தேரர்

414 0

சிங்கள மக்களினால் தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கருதுகின்ற எம்மவர்களும் இருக்கின்றனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் குறிப்பிடத்தக்கவர்கள் எனவும் கலாநிதி அகுரடியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்றைய  வார இதழொன்றுக்கு தேரர் வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கச் செய்து நாட்டுக்குள் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை புதிய கோணத்தில்  பார்க்குமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டுக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் பல்வேறு விமர்ஷனங்கள் உள்ளன. இந்த நல்லிணக்க நடவடிக்கை தொடர்பில் தங்களது கருத்து என்னவென வினவியதற்கே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருட யுத்தத்தினால் அழிவுற்ற மனித உயிர்களைத் தவிர பெற்றுக் கொடுக்க முடியுமான அத்தனை வசதிகளையும் இன, மத பேதங்கள் இன்றி அனைவருக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இருப்பினும், சில சர்வதேச அமைப்புக்கள் இதற்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதனை நிறுத்த வில்லை. சிங்கள மக்களினால் தமிழ் மக்களுக்கு பாரியளவில் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக காட்ட முற்படுகின்றனர். இவர்களில் சிலர் எம்மிலும் உள்ளனர். அவர்களே மேற்சொன்ன நபர்கள் ஆவார்கள்.

ஜனாதிபதி இந்த அனைத்துவிதமான தடைகளையும் சரிசெய்து கொண்டு பயணிக்கையில் பல்வேறு விமர்சனங்களுக்கும் இழிபேச்சுக்களுக்கும் முகம்கொடுக்கின்றார். எமது நாட்டிலுள்ள சில அதிகாரிகள் ஜனாதிபதியின் மிகுந்த கருணைக் குணத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர்.

மியன்மார் அவுன்சான் சுகியிற்கு நோபல் பரிசு வழங்கியது அவர் இனத்தைக் காப்பாற்றியதற்கேயாகும். இருப்பினும், அவர் ரோஹிங்ய சம்பவத்தில் மிகவும் நேர்மையாக செயற்பட்டார்.

இங்கிலாந்தில் தெரேசா மே எந்தவேளையிலும் தமது நாட்டின் இராணுவத்துக்காக குரல் கொடுப்பேன் என பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

நான் எமது ஜனாதிபதிக்கும் கூறுவது இதனைத் தான். நாமும் சுகீயினதும் தெரேசாவினதும் வழிமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். நாம் தவறிழைக்கவில்லை என்றால் யாருக்கும் அஞ்சத் தேவையில்லையெனவும் தேரர் நீண்ட செவ்வியில் ஒரு வினாவுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment