பொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் கவின்த ஜயவர்தன தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு காணப்படுகின்ற பாதுகாப்பே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற விடயத்தை மஹிந்த அவரது காலத்தில் பின்பற்றினாரா.
முறையற்ற செயற்பாடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் போன்ற விடயங்களுக்கு நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டு வர வேண்டுமாயின் கடந்த அரசாங்கத்தில் பலருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்திருக்க வேண்டும்.
தேசிய அரசாங்கத்தில் பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பொலிஸ்மா அதிபர் எவ்விடயத்திலும் அரசியல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டது கிடையாது. இவரது செயற்பாட்டின் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையினை ஏற்றுக் கொள்ளவே வேண்டும் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

