பேரவையின் பேரணியும் தமிழ் மக்களின் ஆர்வமும்! -நரேன்

382 0

000இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இந்த நாடு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்குவதையும் அவர்களது உரிமைகளை மறுப்பதையும் மையமாக வைத்தே தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளும் போட்டியிட்டிருந்தன.

நாட்டை ஐக்கியப்படுத்துவதற்காக உருவான 70 வருட பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தான் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் உரிமைக்காக சாத்வீக ரீதியில் காலி முகத்திடலில் உண்ணாவிரதம் மேற்கொண்ட பொழுது சிங்கள காடையர்களினால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டனர்.

இரத்தம் சொட்டச் சொட்ட தமிழ் இனத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த போது விழுப்புண் ஏந்தி வருகிறார்கள் என்று எள்ளிநகையாடினர்.

சிறிலங்காவை ஏனைய தேசிய இனங்களில் விடுவிக்கும் நோக்கில் உருவாக்கப்டபட்ட 65 ஆண்டுகால பாராம்பரியம் மிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியில் தான் தந்தை செல்வாவுக்கும், பண்டாரநாயக்காவுக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. சிங்கள சிறி என்னும் எழுத்து வலுக்கட்டாயமாக யாழ்ப்பாணத்தில் அனைத்து வாகனங்களிலும் தமிழர் கடைகளிலும் எழுதப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தமழ் தேசிய இனத்தை ஒடுக்குவதில் யார் தலை சிறந்தவர்கள் என்பதை நிரூபிப்பவர்களாகவும், அதற்கு தமிழ் பேசும் சகோதர மதத்தவரை யார் அதிகமாக பயன்படுத்துவது என்ற போட்டியிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையிலேயே இதுகாரும் நடந்த தேர்தல்களும் அதனை ஒட்டி அமைந்த அரசாங்கங்களும் செய்து வந்துள்ளன.

தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவ்வப் போது உறுதி மொழிகள் வழங்கப்பட்டும், தோல்வியின் அச்சத்தில் இருந்த போதெல்லாம் தமிழ் தலைமைகளுடன் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது போல நடித்தும் தங்களது தமிழ் தேசிய இன விரோதப் போக்கிற்கு அடிதளம் இட்டுக் கொண்டனர்.

இவ்வளவு கால கட்டத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அதன் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னனி அதற்கு பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனி ஆகிய அனைத்துமே அந்த இரண்டு பிரதான கட்சிகளுடன் மென்போக்கை கடைப்பிடித்து தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகளை பெறுவதிலேயே குறியாய் இருந்தன.

இவை அனைத்தும் பயனற்று போன நிலையிலும், 1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் என்ற பெயரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு அவர்களது வணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள் ஆகியவற்றின் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது சொத்துக்களும், உடைமைகளும் கொள்ளையிடப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமும் அடைந்தனர். நீதிமன்றத்தின் பொறுப்பில் சிறைச்சாலையில் இருந்த தமிழர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டிருந்தது. 53 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து வடக்கிலும், கிழக்கிலும் இருந்த இளைஞர்கள் இதற்கு மேலும் அழிவுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், தமது தலைவர்கள் தாக்கப்பட்டதைப் பொறுக்க முடியாமலும், தமது பகுதிகளில் வகைதொகையின்றிம் கேட்டுக் கேள்வியின்றியும் தமிழ் இனத்தை ஒடுக்குவதற்காக ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் தற்காப்புக்காக ஆயுதம் எந்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்டபட்டனர்.

இதனையே இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களும், தாங்கள் கடந்த காலத்தில் விட்ட பிழையே இந்த நாடு 30 வருட காலம் ஒரு போர் சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக வெற்றி வாதத்திருலும் பங்கு கொள்கின்றனர்.

யுத்தத்தினை வெற்றி கொண்டது மகிந்தா அல்ல என்றும் இதற்கு முன்னரே தான் பாதியளவு யுத்தத்ததை முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவும், புலிகளை பிரித்து யுத்த வெற்றிக்கு தானே அதிகம் பங்காற்றியதாக இன்றைய பிரதமர் ரணிலும் வெற்றி வாதத்தில் பங்கு பேட்டுக் கொள்கின்றனர். இத்தகைய சந்திரிக்கா அம்மையார் தான் இன்று நல்லிணக்க செயலணியின் தலைவராக இருக்கிறார்.

அவருடைய ஆட்சியில் தான் குமாரபுரம் போன்ற பல்வேறு படுகொலைகள் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்தைகய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இன்று சட்ட ரீதியாகவும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ் தேசிய இனத்தின் பாதுகாப்புக்காவும், இலங்கை அரசின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் சாத்வீக போராட்டங்கள் சரியான பலனை கொடுக்காததினால் தொடங்கப்பட்ட ஆயுதப்போராட்டமானது 2009 இல் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையிலும், மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்ற கவர்ச்சிகரமான அரசியல் சூழ்ச்சியினாலும் சர்வதேச பங்களிப்புடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் மிதவாத கட்சி என்று தங்களை அழைத்துக் கொண்ட இன்றை தமிழரசுக் கட்சியினர் தங்களுடைய பங்களிப்புக்கள் எதனையும் தேசிய இனம் சார்ந்து காத்திரமாக செய்யவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

‘எமது இளைஞர்கள் இனியும் பொறுக்க மாட்டார்கள் என்றும், நாம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும் ‘ வீரவசனம் பேசிய மிதவாத சக்திகள் பின்னர் தலைமை கொடுக்க முடியாமல் ஒதுக்கி கொண்டதும் அரசியல் களத்தில் ஒழிந்து கொண்டதும் தமிழினத்தின் சாபக்கேடு.

ஆயுதப்போராட்டம் மௌனித்ததன் பின்னர் தமிழ் தேசிய இனத்தினுடைய உரிமைப் போராட்டமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் வலுக்கட்டயமாக சுமந்தப்பட்டது. இந்த சுமையை கூட்டமைப்பின் தலைமை தாங்குமா என்பதற்கு அப்பால் தமிழ் மக்கள் இதுகாரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் அனுபவித்து வருகின்ற கொடுமைகளுக்கு எதிராக தமது பெருங் கோபத்தை வெளிப்படுத்தும் முகமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை அனைத்து தேர்தல்களிலும் ஆதரித்து வந்துள்ளனர்.

எவ்வளவு தான் விசுவாசிகளாக இருந்தாலும் கூட்டமைப்புக்கு வெளியில் சென்றால் அவர்களுக்கு அங்கீராம் கிடைக்காது என்பதையும் எவ்வளவு தான் குற்றங்கள் புரிந்திருந்தாலும் கூட்டமைப்புக்குள் வந்து விட்டால் அவைகள் தற்காலிகமாகவேனும் மறந்து ஆதரித்து இருப்பதில் இருந்தும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் அரசியல் தலமைகள் ஓரணியில் நின்றால் தான் இன்றைய காலகட்டத்தில் ஒரளவுக்கேனும் பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்க முடியும் என்று தமிழ் மக்கள் நன்கு தீர்மானித்து முடிவெடுத்திருந்தனர். அதன் வெளிப்பாடு அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக நின்று பெயரளவுக்கேனும் ஒற்றுமையாக இருக்கப் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு அளித்தனர்.

அவர்களது என்ணங்களை புரிந்து கொண்டு அவர்கள் வாக்களித்த காரணத்தையும் புரிந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது அரசியல் காய் நகர்த்தல்களை சரியாக முன்னெடுத்திருக்கின்றதா? என்று தமிழ் மக்களிடையே ஒரு பலமான சந்தேகம் எழுந்துள்ளது.

சர்வதேச நிர்பந்தத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் அல்லது நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்த அரசாங்கத்திற்கு அதே நிர்பந்தத்தின் காரணமாகவே கூட்டமைப்பின் தலைமையும் ஆதரவு அளிக்க நேர்ந்தது. தமிழ் தேசிய இனத்தின் ஆணையைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தனது பேரம் பேசும் அரசியலைக் கைவிட்டு தரகு அரசியலில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இன்று தமிழ் மக்களிடையே பரவலாகவும் பலமாகவும் எழுந்துள்ளது.

பங்காளிக்கட்சிகளை ஓரம் கட்டி அவர்களது கண்களில் மண்ணைத்தூவி விட்டு தமிழரசுக் கட்சி தானே அனைத்து விடயங்களையும் கையாள்வதாலேயே இந்த சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அணிசேர்ப்பது போல் கடந்த முறை ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றுவதில் இருந்தும் இன்று அதன் அமுலாக்கம் குறித்து மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சி அரசாங்கத்திற்கு முண்டு கொடுப்பதில் இருந்து இந்த ‘தரகு அரசியல்’ சந்தேகம் வலுக்கிறது.

தமிழ் தேசிய இனம் தனது இறைமையை யாரிடமும் அடகு வைத்து விடவில்லை என்பதை நிரூபிப்பதற்கு ஒரு தக்க தருணத்தை எதிர்பார்த்து இருந்தது. அதனை நன்குணர்ந்த சமூக ஆர்வலர்களும்இ தமிழரசுக் கட்சியினால் கண்கள் கட்டப்பட்ட கூட்டமைப்பின் பங்களாளிக் கட்சிகள் சிலவும், சூழ்சிகளின் காரணமாக கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அரசியல் கட்சியும், புத்துஜீவிகளும், துறைசார் வல்லுனர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், தொழில் சங்கங்களும், பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை என்னும் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

தமிழ் மக்கள் தமது அரசியல் தலமை தமது அரசியல் அபிலாசைகளை சரியான வகையில் அனைத்து தரப்பினருடனும் பேரம் பேசி நீண்டகாலமாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்ட வேண்டும் என்று நினைக்கிறது.

இறுதியாக நடைபெற்ற யுத்த்தில் இடம்பெற்றதாக ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தினாலும் சுட்டிக்காட்டுப்பட்டுள்ள போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான செயல்கள் என்பவற்றை ஆராய்ந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமே விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்காமல் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறையின் தொடக்க காலத்தில் இருந்தே பலவந்தமாக காணாமல் போகச் செய்தல் என்ற ஒரு விடயம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை உரிய முறையில் விசாரிப்பதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்தாமல் இருப்பதில் இருந்து அதனை விசாரிப்பதில் இந்த அரசாங்கத்திற்கு நாட்டம் இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே இது குறித்தும் ஒரு சர்வதேச விசாரணை தேவைப்படுகிறது.

பன்னெடும் காலமாக பரம்பரை பரம்பரையாக தாம் வாழ்ந்து வந்த பூமியில் யுத்தத்தை காரணம் காட்டி அந்த மக்களை அப்புறப்படுத்தி விட்டு அவர்களை சொந்த நாட்டிலேயே ஏதிலிகளாக்கிவிட்டு யுத்தம் முடிந்த பின்னரும் அவர்களது பூமியை அவர்களிடம் கையளிக்காமல் இருக்கிறது. அந்தக் காணிகளில் புத்தர் சிலைகைளை வைத்து பெரிய பெரிய அளவில் விகாரகைளை கட்டுவதுடன் புதிய புதிய கிராமங்களை உருவாக்கி இங்கு சிங்கள மக்களை பலவந்தமாக குடியேற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

ஒரு புறம் இராணுவத்தரப்பினரால் ஏற்படுகின்ற அச்சம் மறுபுறத்தில் புதிதாக கொண்டு வந்து விடப்பட்டுள்ள சிங்கள மக்களை கண்டதும் ஏற்படுகின்ற அச்சம் என்று இருவிதமான அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ் தேசிய இன்று வாழ்கிறது. அவசரகால சட்ட்த்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் வகை தொகையின்றி கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் இன்று சட்டத்தின் மூலமாக கூட விடுதலை பெற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை உரிய வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கும் தேர்தல் அரசியலுக்கு அப்பால் எதிர்வரும் 24 ஆம் திகதி ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணி ஒன்றை தமிழ் மக்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ளது.

தமிழ் மக்கள் அனைவரும் தாங்கள் தாங்கள் வழிபடும் கடவுளர்களின் அனைத்து திருவிழாக்களும் ஒரே நாளில் ஒரே இடத்தில் நடப்பதாக கருதி யாழ்ப்பாண முற்றவெளியில் கூட வேண்டும். வீதிகள் தோறும் தமிழ் மக்களின் பேரணியின் எதிரொலிப்பு தெரிய வேண்டும். நாம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கும், எமக்கு இழைக்கப்பட்ட அநிதீகளுக்கு நீதி கிடைப்பதற்கும், இந்த நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினருடனும் நாம் கைகோர்த்து நடப்பதற்கும் இந்த பேரணி மிகவும் அவசியமானது.

இதுவரை காலமும் யாரோ எமக்கு விடுதலை பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த எமக்கு, எமக்கான விடுதலையை நாமே பெற்றுக் கொள்ள முடியும் அல்லது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளது. இந்த சந்தர்ப்பம் தொடர்ந்தும் இருக்குமா என்பது சந்தேகமே. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே எழுக தமிழ் பேரணியை எழுச்சி மிக்கதாக்குவோம்.