தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள்

5529 0

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திர திட்டத்தின் D1 வடக்கு கால்வாய்க்கு உரித்தான பழைமைவாய்ந்த தீப்பெட்டி பாலத்தின் மீள்நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) முற்பகல் ஆரம்பமானது.

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதான கால்வாயான வடக்கு கால்வாய்க்கு குறுக்காக அமைந்துள்ள தீப்பெட்டி பாலம் விவசாய குடியேற்றத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

அண்மையில் இந்த பாலம் உடைந்ததன் காரணமாக பிரதேச விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்ததுடன், இந்தப் போகத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட 15,000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீரை விநியோகிக்க முடியாது போனது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் நீர்ப்பாசன அதிகாரிகளால் துரிதகதியில் இப்பாலத்தின் உடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு நீர் விநியோகம் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை பார்வையிட சென்றிருந்த ஜனாதிபதி, பாலத்தை மீண்டும் புதிதாக நிர்மாணிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிக்கமைய இந்த பாலம் மீள நிர்மாணிக்கப்படுவதுடன், இதற்கு 250 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் முகமாக நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி, அப்பிரதேசத்தை பார்வையிட்டார்.

நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பாலத்திற்கான திட்டம் தொடர்பாக பொலன்னறுவை வலயத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.கே. சேவாகம, ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் தீப்பெட்டி பாலத்திற்கு சமாந்தரமாக ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாலத்தையும் ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பங்குபற்றிய பிரதேச மக்களுடன் ஜனாதிபதி சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, அமைச்சின் செயலாளர் என்.ஏ. சிசிர குமார, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் எஸ். மோகனராஜா, மாவட்ட செயலாளர் பீ.எஸ்.பீ. அபேவர்தன, நகரபிதா சிதத் சாணக்க ரணசிங்க, வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல பண்டார ஜயரத்ன உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment