தமிழகத்தில் 6 இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று கரைப்பு!

255 0

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை, மதுரை, திருச்சி உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் இன்று கரைக்கப்படுகிறது. 

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியானது கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஸ்தியை பெற்றுக்கொண்டார்.

தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் வாஜ்பாய் அஸ்தி இன்று காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில் அதாவது புனித ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட இருக்கிறது. இதன்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலில் கரைக்கப்பட உள்ளது.

இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தி கரைக்கப்படும். முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் முக்கூடலிலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரம் கடலில் கரைக்கப்படும்

மத்திய கயிறு வாரியத்தின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தியானது பவானி முக்கூடலில் கரைக்கப்படும். கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

Leave a comment