எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்- டெனிஸ்வரன்

185 0

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்.

பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர். நீங்கள் ஒரு பெரிய மனிதர் தூர நோக்குடையவர். இத்தவறினைச் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு  இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

கடந்த கால உயிர் தியாகங்களுக்கு அர்த்தம் தேட வேண்டும்.

முன்னாள் போரளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் உள்வாங்கி புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான சில யோசனைகள் கடந்த காலத்தில் என் மனதில் எழுந்ததுண்டு.

எம்மினத்திற்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்தவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதைவிட இரண்டு மடங்கு வினைத்திறனாகவும் , நேர்மையாகவும் செய்வார்கள்.

செய்யக்கூடிய பலர் இருக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் செய்யுமெனில் அவ்விடயம் தூசி தட்டப்படும். என்னைப் பொறுத்தமட்டில் கூட்டமைப்பு சரியாக பயணிக்கின்றது. கடந்த காலத்தில் பிரிந்து சென்றவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டுப்பாருங்கள்.

அதற்கு பின்னால் ஒரு உப்புச்சப்பில்லாத காரணம் தான் அதிகமாக இருக்கும். தங்களுடைய சுய நலனும் தனிப்பட்ட கட்சி அரசியலும், ஆசன ஒதுக்கீட்டு பிரச்சினைகளும் தான் அதிகம்.

மக்கள் நலனும், கடந்த கால உயிர் இழப்புகளுக்கு அர்த்தம் தேட வேண்டுமென்று ஒரு துளியேனும் நினைத்திருந்தால் அத்தவறை செய்திருக்க மாட்டார்கள்.

ஒருசில பிரச்சனைகள் இருக்கின்றன . அதனை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு உங்களைப்போன்ற பெரியவர்களிடம் உள்ளது.  இப்பொறுப்பில் இருந்து தவறிவிட வேண்டாம். தந்தை செல்வா கூறிய ஒருவிடயம் ஞாபகத்துக்கு வருகின்றது ‘தமிழரை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்று.

உங்களைப் போன்ற எம்மை வழி நடத்த வேண்டியவர்களும், பெரியவர்களும் வழி தடுமாறிச் செல்வீர்கள் என்றால் உங்களைப் போன்றோரை கடவுளும் மன்னிக்கமாட்டார்.

உங்களைப் போன்றோருக்கு அறிவுரையும் ஆலோசனையும் சொல்லக் கூடிய அனுபவமும் வயதும் எனக்கில்லை ஒத்துக்கொள்கின்றேன்.

ஆனால் கடந்த காலத்தில் விதைக்கப்பட்ட ஒவ்வொரு விலைமதிப்பற்ற உயிர்களும் அர்த்தமற்றதாகிவிடும் என்ற வேதனையிலும் , வலியிலும் இந்த வேண்டுகோள்களை தங்களிடம் முன்வைக்கின்றேன்.

எனக்கும் உங்களுக்கும் இடையில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி விடயத்தைப் பார்க்க வேண்டாம். அவ்வாறு பார்ப்பீர்கள் என்றால் நான் கூறுவது பிழையாகத்தான் தெரியும்.

தென்பகுதியில் உள்ளவர்கள் எம்மை எவ்வாறு பிரித்து கையாளலாம் என்று நினைக்கின்றார்களோ அதற்காக அவர்கள் எந்த வித முயற்சியும் எடுப்பதற்கு முன்னமே நாம் பிரிந்து நிற்கின்றோம்.

ஆண்டாண்டு காலமாக எம்மினத்தின் பின்னடைவுக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் பிற இனத்தவர்களைவிட எம்மினத்தவர்கள்தான் அதிகமாகவுள்ளனர்.

நாம் ஏன் இதை மாற்றி அமைக்க கூடாது? சிந்தித்து செயற்படுங்கள் செயல்வடிவம் கொடுப்பதற்கு நான் தயார்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment