நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்

288 0

201609171234547334_thirumavalavan-interview-karnataka-violence-tamil-people-25_secvpfஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சென்னையில் நடந்த சுவாதி கொலை வழக்கில் கைதான வாலிபர் ராம்குமார் சிறையில் திடீர் என தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதை என்னால் நம்ப முடியவில்லை.

இந்த வழக்கில் ராம்குமாருக்காக வாதாடும் வக்கீல் நேற்று காலைதான் ராம்குமாரிடம் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசி உள்ளதாக கூறி உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நினைக்கிறது.

மாஜிஸ்திரேட்டு தலைமையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை ஏற்று கொள்ள முடியாது. ஐகோர்ட்டு நீதிபதியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும். மேலும் இந்த ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

மேலும் ராம்குமார் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.

ராம்குமார் ஒரு தலித் என்பதற்காக மட்டும் இதை நான் கூறவில்லை. தலித் மக்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. சாதிய கட்சிகள் தலித் மக்களுக்கு எதிராக பிரசாரத்தை செய்து வருகிறது.

சிறையில் ராம்குமார் இறந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறை துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறையில் ராம்குமார் இறந்த சம்பவத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதில் உண்மை நிலையை வெளியே கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், சிறுத்தை வள்ளுவன் ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.