சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

303 0

201609190957242482_pon-radhakrishnan-says-tn-government-should-concentrate-on_secvpfசிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் மீது சிறையில் நடந்த தாக்குதல் மற்றும் சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை போன்ற அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்படுவது அவசியமாகும். இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டுள்ளார். மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்களில் ஒன்றான விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் வரை 185 கிலோ மீட்டர் தூர சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன. இப்பணி 3 பாகமாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.3,300 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசி உள்ளோம். மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலை ரூ.19 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும். விழுப்புரம்-திருக்கோவிலூர் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.