வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகை

190 0

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை கொண்டுவரப்பட்டு தமிழக மக்கள் அஞ்சலிக்கு பின்னர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரைக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமரும் பா.ஜனதாவின் முதுபெரும் தலைவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.

வாஜ்பாய் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழகத்துக்கு அஸ்தி கலசத்தை எடுத்து வருவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அஸ்தி கலசம் நாளை (திங்கள்) சென்னை கொண்டுவரப்படுகிறது.

இதுபற்றி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழகத்தின் மீது தனிப் பாசம் கொண்டிருந்த தன்னிகரற்ற தலைவர் வாஜ்பாயின் அஸ்தி தமிழக மக்கள் அஞ்சலிக்காக நாளை சென்னை கொண்டுவரப்படுகிறது.

கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய கடல் உள்பட பல இடங்களில் அஸ்தியை கரைப்பது பற்றி தமிழக தலைமை முடிவு செய்யும் என்றார்.

இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

அனைத்து மாநில பா.ஜனதா தலைவர்களும் டெல்லியில் வாஜ்பாய் அஸ்தியை பெற்று அந்த அந்த மாநிலங்களில் உள்ள நதிகள், கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நானும் முக்கிய நிர்வாகிகளும் இன்று டெல்லி சென்று அஸ்தியை பெற்றுக் கொள்வோம். அதை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க முடிவு செய்துள்ளோம்.சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், மதுரையில் வைகை ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு, கோவையில் பவானி ஆறு, கன்னியாகுமரி கடல் ஆகிய இடங்களில் கரைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment