செப்டெம்பர் ஐந்தில் அரசாங்கம் ஆட்டம் காணும்!-தினேஷ் குணவர்தன

228 0

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் திரண்டு தமது எதிர்ப்பின்னைத் தெரிவிக்கவுள்ளனர். எனவே அத்துடன் அரசாங்கம் ஆட்டக் காண்பதுடன் அதிலிருந்து நல்லாட்சி வீடு செல்லும் அத்தியாயம் ஆரம்பிக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

“நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றரை வருட ஆட்சியில் நாடு அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆகவே இனியும் இந்த அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டில் அபிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து எதிர்கருத்துள்ள அரசியல் தரப்பினரை தண்டிக்கின்றனர்.

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைத் திட்டத்தினால் மக்கள் நாளுக்கு நாள் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எப்போதுமில்லாதவாறு வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது. ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியாததால் தேசிய சொத்துகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கொண்டு வந்து பூதாகரமான நிலவரத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆகவேதான் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்றை நடத்துவதற்கு ஏற்பாடுசெய்துள்ளோம். நாடு தழுவிய ரீதியிலிருந்து கொழும்பில் அணி திரளும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபடவுள்ளனர். எதிர்ப்பு பேரணி வரலாற்றில் கூடுதலான மக்கள் கலந்துகொண்ட பேரணியாக இது அமையவுள்ளது. எனவே அப்பேரணியுடன் அரசாங்கம் ஆட்டம் காண்பதுடன் அதிலிருந்து வீட்டுக்குச் செல்லும் அத்தியாயம் ஆரம்பமாகவுள்ளது”என தெரிவித்தார்

மேலும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தொடர்பில் சபாநாயகர் வழங்கிய தீர்மானத்தை கண்டிக்கிறோம். ஏனெனில் நியாயமாகப் பார்த்தால் கூட்டு எதிர்க்கட்சிக்கே உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும். ஆகவே அரசாங்கத்தின் சுய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பாராளுமன்ற ஜனநாயகத்தை மீறியுள்ளதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a comment