மஹிந்தவுக்கு சேறு பூசவே விசாரணை !

197 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று  இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தியது. முன்னாள் ஜனாதிபதி மீது சேறு பூசுவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

“மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் அரசாங்கம் தற்போது அடக்குமுறை, மோசடி மற்றும் மக்களின் உரிமைகளை எப்போதுமில்லாதவாறு தற்போது மீறிச் செயற்படுகிறது.

குற்றப்புலனாய்வுப் பிரிவு இன்று இரண்டரை மணி நேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தியது. இது சேறு பூசும் நடவடிக்கையாகும். குற்றப்புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்தின் கையாளாகச் செயற்படுகிறது. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அதனாலேயே அவர்களுக்கு எதிராக இவ்வாறான கெடுபிடிகளை முன்னெடுத்து வருகிறது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலம் நாட்டு பாரிய பாதிப்பு ஏற்படக்கூடியது. எனினும் அவ்வுடன்படிக்கை இறுதியானது இல்லையெனவும் தேவைப்படுமிடத்து ஒரு வருடத்தின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அவரின் கருத்து யதார்த்தத்திற்குப் புறம்பானதாகும். சிங்கப்பூரின் அனுமதியின்றி அவ்வுடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்ள முடியாது.

மேலும் மக்களின் வாக்களிக்கும் உரிமையை அரசாங்கம் இல்லாது செய்துள்ளது. எந்தவொரு தேர்தலையும் உரிய காலப்பிரிவில் நடத்துவதாக இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான வாக்களிக்கும் உரிமையை இல்லாது செய்வதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஆகவேதான் நல்லாட்சி அரசாங்கம் வீடு செல்ல வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக நாம் தெரிவிக்கிறோம்.” என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் செப்படெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடு தழுவிய ரீதியிலிருந்து பெருமளவிலான மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து அரசாங்கத்திற்கு எதிர்பினைத் தெரிவிக்கவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment