சுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – கம்பன்பில

207 0

பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் விவகாரம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என பிவிதுருஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

பொரளை  என்.எம்.பெரேர நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச துறைகளில் சேவையாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி வழங்கப்படுவது வழமை. எனினும் இம்மாதம் அது வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தாம் உயிருடன் வாழ்வது குறித்து கிராம சேவையாளர் ஊடாக அத்தாட்சிப்படுத்த வேண்டும். எனவே அந்த அத்தாட்சி பத்திரம் வழங்கப்படவில்லை என்ற காணத்தைக் கூறியே ஒய்வூதியம் பெறுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

அக்காரணத்தைக் கூறி அரசாங்கம் சம்பளம் வழங்காதிருக்குமாக இருந்தால், ஜனவரி மாதமே அதற்கான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்.அதனைச் செய்யாது ஏன் ஆகஸ்ட் மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? மேலும் அத்தாட்சிப் பத்திரம் வழங்கியவர்களின் சம்பளமும் வழங்கப்படவில்லை. நீண்ட காலம் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இருக்கும் ஒரே வருமானம் ஓய்வூதியம்தான். எனவே அதனையும் வழங்காதிருப்பது அரசாங்கம் செய்யும் பாரிய குற்றமாகும்.

அத்துடன் நேற்றிரவு  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது, சிலர் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

எனினும் அது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a comment