ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்!

264 0

“யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் எதிர்காலம் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா பதவி விலகவேண்டும்.

அதனூடாக யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபை யாப்பை திருத்தியமைத்து, திறமையான நிர்வாகத்தை அமைத்து கல்லூரியை சிறந்த நிலைக்குக் கொண்டுவர உதவி செய்யவேண்டும் என பேராயரிடம் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம்” என யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் எதிர்ராஜ் வலியுறுத்தினார்.

“யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்” என வலியுறுத்தி கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

யாழ். நல்லூரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாடசாலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று விளக்கமளித்தனர். இதன்போதே கல்லூரியின் கொழும்புக் கிளையின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆளுநர் சபையால் முன்னெடுக்கப்படும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக வட்டுக்கோட்டையிலும் கொழும்பிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்தப் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் டானியல் தியாகராஜா, தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் வழங்கியிருந்தார்.

அதில், யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு அமெரிக்காவிலுள்ள தர்மகர்தா சபைதான் காரணம் என கூறியிருந்தார். அதற்கு பல காரணங்களையும் விளக்கங்களையும் கூற முற்பட்டார். ஆனால் அன்று அவர் கூறிய விளக்கங்களில் ஒன்றுகூட ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல.

அமெரிக்காவிலிருந்து வரும் நிதியின் சொந்தக்காரர் ஆளுநர் சபை என்றும் அதனைச் சொந்தம் கொண்டாட அமெரிக்காவிலுள்ள தர்மகர்த்தா சபையினர் முயற்சிக்கிறார் என்றும் அதன் பலனாகவே இந்தப் பிரச்சினையை அவர்கள் உருவாக்குகின்றார்கள் என பேராயர் விளக்கமளித்திருந்தார்.

ஆனால் சட்டத்தின் பிரகாரம் நம்பிக்கை நிதியமானது மூன்று தரப்புகளுக்கு உள்பட்ட ஒரு இணக்கப்பாடாகும். அதில் முதலாவது தரப்பு கொடையாளிகளாகும். இரண்டாவது தரப்பு தர்மகர்தா சபையினர். மூன்றாவது தரப்பு பயனாளிகளான யாழ்ப்பாணக் கல்லூரி – அதன் ஆளுநர் சபை.

அவ்வாறு இருக்கையில் யாழ்ப்பாணக் கல்லூரியின் நிதியை தர்மகர்த்தா சபையினர் சொந்தம் கொண்டாட நினைக்கிறார்கள் என்று கூறுவது, முற்றாகத் தவறான கூற்று. இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப கூறப்பட்ட ஒரு கூற்று.

யாழ்ப்பாணக் கல்லூரியின் யாப்பு 2014ஆம் ஆண்டு திருத்தப்பட்டுள்ளது என்பதையும் பேராயர் கூறியிருந்தார். அத்துடன், யாப்பு மாற்றத்தின் போது, தர்மகர்த்தா சபையின் அங்கத்தவர்கள் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தர்மகர்த்தா சபையினர் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வந்து திரும்பும் ஒவ்வொரு தடவையும், கொழும்பிலுள்ள பழைய மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடிச் செல்வார்கள். அவர்கள் ஒருமுறையாவது இந்த யாப்புத் திருத்தம் பற்றி எமக்குக் கூறவில்லை.

2016ஆம் ஆண்டு வருகை தந்த தர்மகர்த்தா சபையின் பிரதிநிதி கூறியிருந்தார், 2015ஆம் ஆண்டு திடீரென யாப்பு திருத்தப்பட்டுள்ளது என்றும் அதன் உத்தியோகப்பற்றற்ற பிரதி ஒன்றையும் அவர் வழங்கியிருந்தார்.

அதனை வைத்து நாம் ஆராய்ந்த போது, இந்த வருட முற்பகுதியில் இன்னுமொரு யாப்பு புதிதாக வந்தது. அது 2014ஆம் ஆண்டு திருத்தப்பட்ட உண்மையான யாப்பு என சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த யாப்பு மாற்றம் பற்றி அமெரிக்காவிலுள்ள தர்மகர்த்தா சபையினருக்கு எதுவுமே தெரியாது.

“2014ஆம் ஆண்டு மாற்றம் செய்த யாப்புடன் 4 ஆண்டுகள் பயணித்த தர்மகர்த்தா சபையினர் தற்போது, 2018ஆம் ஆண்டில்தான் பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என்று பேராயர் கூறுகிறார். இதன்மூலம் பிரச்சினையைத் திசை திருப்பப் பார்க்கிறார்.

பழைய மாணவர்களாலும் பாடசாலைச் சமூகத்தாலும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து 2016ஆண்டு தர்மகர்த்தா சபையினர் இங்கு வருகை தந்து யாழ்ப்பாணக் கல்லூரி நிர்வாகத்துடனும் நிதியியல் முகாமைத்து நிபுணர்களுடனும் இங்குள்ள நிலமைகளை ஆராய்ந்து பல திருத்தங்களை முன்வைத்தனர்.

அவர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் – பரிந்துரைகள் எவையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் 2017ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு வழங்கப்படும் நிதியை ஒவ்வொரு காலாண்டும் 20 சதவீதத்தால் தர்மகர்த்தா சபையினர் குறைத்தார்கள்.

இந்த நிதிக் குறைப்பின் மூலம் முன்னேற்றங்கள் உள்ளனவா என்று கடிதங்கள் மூலம் கேட்டுவந்தார்கள். ஆனால் இன்றுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதனால் ஆளுநர் சபையின் தலைவரும் உபதலைவரும் பதவி விலகவேண்டும் என்ற நிபந்தனைவை முன்வைத்து எதிர்வரும் 7ஆவது காலாண்டில் (செப்ரெம்பரில்) 20 சதவீதமும் 8ஆவது காலாண்டில் (ஜனவரியில்) 50 சதவீதமும் நிதிக் குறைப்புச் செய்யவுள்ளார்கள். அதன் பின்னர் முற்றுமுழுதாக நிதியை நிறுத்திவைக்க தர்மகர்த்தா சபையினர் தீர்மானித்துள்ளனர். எனவே தர்மகர்த்தா சபை மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பிரச்சினைகளைத் திசை திருப்பும் வேலையைத்தான் பேராயர் முன்னெடுக்கிறார் – என்றார்.

Leave a comment