மீண்டும் இலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற வாய்ப்பு – கலாநிதி எம்.லாபீர்

1456 0

கண்டி திகன கலவரம் இடம்பெற்று நான்கு மாதங்கள் மாத்திரம் கழிந்துள்ள நிலையில் மீண்டும் இலங்கையில் இவ்வாறான இனக் கலவரங்கள் மற்றும் தாக்குதல் முயற்சிகள் என்பன இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் காணப்படுவதாக திகன அனர்த்த சேவைகள் நிலையத் தலைவரும், பிரபல சமூக ஆய்வாளருமான கலாநிதி எம்.லபீர் சுபைர் அக்குறணையில் தெரிவித்துள்ளார்.அக்குறணை நியுஸ் வீவ் ஊடகக் கல்லூரியில் பகுதி நேர ஊடக டிப்ளோமா பாடநெறியைத் தொடரும் மாணவர்களுடனான முக்கிய சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, திகன கலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நியுஸ் வீவ் ஊடகக் கல்லூரியின் பணிப்பாளர் முஹம்மத் இர்பான் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது கலாநிதி லபீர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“திகன பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தின் கவனமும் அது தொடர்பான ஏனைய மீள்கட்டமைப்பு உட்பட அனைத்து பாதுகாப்பு பணிகளும் மிகவும் மந்தகரமாகவே இடம்பெற்று வருகின்றன. திகன பிரச்சினை இடம்பெற்று நான்கு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் பல்வேறு சமூக வலை தளங்களிலும் இன்னும் இனங்களுக்கு மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கும் செய்திகளே மிகக் கூடுதலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறன.

அத்துடன் முஸ்லிம்கள் தொடர்பாக இன வெறுப்பையும், முரண்பாடுகளையும் பெரும்பான்மையின மக்கள் மனங்களில் தோற்றுவிக்கும் பல வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் மீண்டுமொரு தடவை முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட இனக்கலவரங்கள் யாரோ சிலரால் திட்டமிடப்பட்டு வருகிறது என்பதை எமக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

அத்துடன், கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதில் கூட அரச அதிகாரிகள் இன்னும் அக்கறை செலுத்த தவறி வருகின்றனர்.
இவ்வளவு பெரிய அனர்த்தங்களும் அழிவுகளும் இடம்பெற்றுள்ள போதிலும் பாதிப்புக்கள் தொடர்பான அரசாங்கத்தின் இழப்பு மதிப்பீடு வெறும் 28 மில்லியன்கள் மாத்திரமே.

இதே போன்று பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு இன்னும் இழப்பீடுகள் முறையாக வழங்கப்படவில்லை. மீண்டும் இப்படியான இனக்கலவரங்கள் ஏற்படுவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்னும் உரிய ஒழுங்குகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறிவருவதால் திகன மக்கள் மாத்திரமின்றி முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் தமது பாதுகாப்பு குறித்து சிந்திக்க வேண்டிய கடமைப்பாடுள்ளது.

இது மாத்திரமின்றி நாடளவிய ரீதியில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இயற்கை அனர்த்தங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும் மனித செயற்பாடுகள் காரணமாக இடம்பெற்று வரும் இவ்வாறான அனர்த்தங்கள் பற்றிய எந்தவொரு திட்டமிடலுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவர்களிடம் இன்னுமில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் தரப்பினராக யாருமில்லை”எனவும் கலாநிதி லபீர் சுபைர் மேலும் தெரிவித்துள்ளார்.

அக்குறணை நியுஸ் வீவ் ஊடக நிறுவனம் மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இருபது பேருக்கு அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்புடன் ஒரு வருட ஊடக டிப்ளோமா பாடநெறியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

Leave a comment