கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திட்டத்தின் மூலம் நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஹோமாகம மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு இருக்கின்ற வழிமுறைகள் சம்பந்தமாக எழுத்துமூலம் விளக்கம் முன்வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப முறைப்பாடு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் ஹோமாகம மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த விசாரணை தவணையின் போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் இதன் ஆரம்ப முறைப்பாடு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்தாலும், குறித்த குற்றம் இடம்பெற்றிருப்பது கொழும்பு மேல் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் என்று சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
என்றாலும் இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆலோசனை பெற்று எழுத்துமூலம் விளக்கமளிக்க கால அவகாசம் வழங்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரினார்.
இதனையடுத்து ஒக்ேடாபர் மாதம் 09ம் திகதி வரை நீதிபதி கால அவாசம் வழங்கியதுடன், அன்றைய தினம் எழுத்து மூல விளக்கம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

