பெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்!

25968 0

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென ஓர் அன்பான இல்லம்

(எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராம தொழிற்பயிற்சி மையத்தின் அதிபர் மகேந்திரன்நந்தகுமார்  )

அமைக்கவேண்டும் என்ற முயற்சியின் பயனாய் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் 6ஆவது சிறுவர் கிராமமாக யாழ்ப்பாணத்தில் “எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் யாழ்ப்பாணம்” அமைக்கப்பட்டது.

யாழ். நகரில் இருந்து 4.5 கிலோ மீற்றர் தொலைவில் நாயன்மார்க்கட்டு பிரதேசத்தில் குறித்த சிறுவர் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் பராமரிப்பு என்பதற்கு அப்பால் தனது மற்றுமொரு பரிணாமமாக மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் ஒன்றினையும் யாழ்ப்ப்பாணம் செம்மணிப் பிரதேசத்தில் உள்ள சிறுவர் கிராமத்தில் அமைத்துள்ளது.

எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமத்தினது செயற்பாடுகள் மற்றும் தொழிற்பயிற்சி மையத்தின் திட்டங்கள் குறித்து அறிவதற்காக வாகீசம் ஊடகக் குழுவினர் யாழ் எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதன்போது சிறுவர் கிராமத்தின் உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மையத்தின் அதிபர் மகேந்திரன் நந்தகுமார் மற்றும் திட்ட வடிவமைப்பினை மேற்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியற் பேராசிரியருமான நா.சண்முகலிங்கன் ஆகியோரைச் சந்தித்தோம்.

புதிதாக ஆரம்பித்துள்ள தொழிற்பயிற்சி மையம் குறித்துக் கூறுங்கள் ?

யாழ் எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராம தொழிற்பயிற்சி மையமானது யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் சமூகவியற் பேராசிரியருமான நா.சண்முகலிங்கன் அவர்களின் சிந்தனையில் தோற்றம் பெற்றது. இதற்கான திட்ட முன்மொழிவுகளை அவரே எமக்கு வழங்கினார். தற்போதும் அவர் எங்களுடன் இருக்கிறார். இந்த பயிற்சி மையமானது நான்கு பிரிவு கற்கை நெறிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

01) அழகுக்கலை பயிற்சி நெறி
02) A/C திருத்துதல் பயிற்சி நெறி
03) ஆங்கிலப் பயிற்சி நெறி (NVQ Level 04)
04) தகவல் தொழில்நுட்பம்

ஆகிய கற்கை நெறிகளை ஆறுமாத கால கற்கை நெறிகளாக ஆரம்பித்துள்ளோம். ஒவ்வொரு கற்கை நெறியிலும் சுமார் 15 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இக் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள்? உமது சிறுவர் இல்ல மாணவர்களே இங்கு கற்கிறார்களா?

இல்லை. சிறுவர் இல்ல மாணவர்கள் இங்கு கற்கவில்லை. வெளியிலிருந்தே மாணவர்கள் வந்து கற்கிறார்கள். இங்கு கல்விகற்கும் மாணவர்கள் பல்வேறு காரணங்களால் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களே இங்கு கற்கிறார்கள். .இவ்வாறு பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களில் இருந்து மிக வறிய மாணவர்களை சில படிமுறைகளின் ஊடாக இக் கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்கின்றோம். சில கற்கை நெறிகளுக்கு சுமார் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு கற்கை நெறிக்கு 15 மாணவர்கள் என்ற அடிப்படையிலேயே தெரிவுசெய்துள்ளோம்.

எப் பிரதேசங்களில் இருந்து மாணவர்களைத் தெரிவு செய்துள்ளீர்கள் ?

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். தூர இடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மாதாந்த போக்குவரத்துக் கொடுப்பனவுகளை வழங்குகின்றோம். இங்கு அவர்களுக்கான உணவு வழங்கப்படுகின்றது. கற்கை நெறிக்கு அவர்களை உள்ளீர்த்திருந்தாலும் அவர்களுக்கான பிற சூழலையும் அவர்களுக்கு சாதகமான முறையில் மாற்றிக் கொடுக்கவேண்டும். அவ்வாறெனில்தான் அவர்களால் சிறப்புத் தேர்ச்சியை அடைய முடியும்.

வகுப்புக்கள் எவ்வாறு நடைபெறுகின்றன ?

காலை 08 மணி முதல் மாலை 04 மணி முதல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வகையிலேயே நடைபெறுகின்றது. அனைத்தும் இலவசம் என்பதற்காக ஒழுங்கீனங்களை அனுமதிப்பதில்லை. வரவு கண்காணிக்கப்படுகின்றது. தினமும் காலையில் கொடி ஏற்றி மாலையில் இறக்குவார்கள் காலையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒருவர் நற்சிந்தனை கூறியாகவேண்டும். இங்கு அவர்களுக்கான கற்கை நெறிக்கு அப்பால் பொதுவான விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலக் கற்கை நெறி அல்லாத ஏனையவர்களுக்கும் தினமும் ஒரு மணி நேர ஆங்கில கற்பித்தல் நடைபெறுகின்றது.

இவ்வாறு பலர் கற்கை நெறிகள் நடத்துகின்றார்கள்? சான்றிதழ்கள் வழங்குகின்றார்கள்? எனினும் பலர் வேலையற்று நிற்கின்றார்கள்? உங்களிடம் கற்கை நெறிக்குப் பின்னான ஏதேனும் திட்டம் உள்ளதா ?

நிச்சயமாக அவர்களுக்கான தொழில் வாய்ப்பிற்காக நாங்கள் துணை நிற்போம். இது வெறும் சான்றிதழுக்கான கற்கை நெறியாக இருக்காது என்ற உறுதிமொழியை எம்மால் வழங்க முடியும். இவர்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல் அல்லது வேறு தொழில் நிறுவனங்களில் இவர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் செய்து கொடுப்போம்

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் பற்றிக் கூறுங்கள் ?

பதினொரு குடும்பங்களுக்கான இல்லங்களையும், எஸ்.ஒ.எஸ். பிள்ளைகளுக்கும் அயல்ப்பிரதேச பிள்ளைகளுக்குமான ஒரு பாலர் பாடசாலையும், இளைஞர் விடுதியையும் உள்ளடக்கியதாக எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் செயற்பட்டுவருகின்றது. ஒரு குடும்பத்தில் பத்து முதல் 12 வரையான சிறுவர்களை பராமரிக்கின்றோம். இவர்களுடைய ஒவ்வெரு இல்லத்திற்கும் ஒவ்வாரு தாய் இருப்பார். அவர் விடுமுறை கருத் வெளிச் சென்றால் உதவித் தாய் ஒருவர் சிறுவர்களுடன் இருப்பார். தாங்கள் பெற்றோரை இழந்த அல்லது கைவிடப்பட்ட பிள்ளைகள் என்ற உணர்வு சிறிதளவும் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்கின்றோம். உங்களது வீடு எப்படி இருக்குமோ? உங்களது வீடுகளில் சிறுவர்கள் எப்படி இருப்பார்களோ அதற்கேற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அன்பான குடும்பம், உறுதியான கல்வியையே வழங்குவதற்கு நாம் முயற்சிக்கிறோம்.

இந்தச் சிறுவர்களை எவ்வாறு இணைக்கிறீர்கள் ?

பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து வீட்டில் பராமரிக்க முடியாத சூழலில் நீதிமன்றினால் அனுப்பப்படுகின்ற சிறுவர்களை இங்கு இணைத்துக்கொள்கின்றோம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்களை ஒரு தாயின் பராமரிப்பின் கீழ் ஒரு இல்லத்தில் இணைக்கின்றோம். மதம் சார்ந்தும் அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 14 வயதுவரை ஆண் சிறுவர்கள் இந்த வீடுகளில் வசிப்பார்கள் 14 வயதிற்கு மேல் இளைஞர் விடுதியில் தங்கவைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்கள் குடும்ப இல்லத்தில் இணைந்துகொள்வார்கள்.

சிறுவர்களுக்கான கல்வி எங்கு வழங்கப்படுகின்றது ?

மற்றைய சிறுவர்களைப் போல பாடசாலைகளிலேயே கல்விகற்கின்றார்கள். இவர்களுக்கென அனுமதிக்கப்பட்ட சுமார் 13 பாடசாலைகளில் இவர்கள் சென்று கல்வி கற்றுத் திரும்புகின்றார்கள். மாலை நேரங்களில் விளையாட்டு பின்னர் இங்கு ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் வளவாளர்களால் கற்பிக்கப்படுகின்றன. இங்கு கல்விகற்ற சில சிறுவர்கள் பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளனர். இது எங்களுக்குப் பெருமையான விடயம்.

சுமார் 10 பிள்ளைகளை ஒரு அம்மாவிடம் ஒப்படைப்பதாக கூறுகிறீர்கள் இது எப்படிச் சாத்தியமாகிறது ?

இங்கு அம்மாக்களை தெரிவு செய்வதானது திருமணம் செய்யாத அல்லது கணவனை இழந்த பெண்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியளித்தலின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றது. பின்னர் அம்மாக்களிடம் பிள்ளைகளை ஒப்படைக்கிறோம். அவர்கள் தங்கள் பிள்ளைகளாக பார்த்துக்கொள்வார்கள். ஒவ்வெரு வீட்டிற்கும் தனித்தனி குளியலறை மலசலகூடம் படுக்கையறை, சமயலைறை என வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அவர்களுக்கான அந்த மாத்திற்குத் தேவையான நிதி வழங்கப்படுகின்றது. பிள்ளைகளுக்கான பிறந்தநாள் பூப்புனித நீராட்டுவிழா உள்ளிட்டவைகள் கூட நடைபெற்றிருக்கின்றன.

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தின் அடுத்த கட்ட திட்டம் என்ன ?

சிறுவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை பராமரிப்பதற்கான தேவை இருந்தது. தற்போது யுத்தம் இல்லை. சிறுவர் இல்லங்களின் தேவை தவிர்க்கப்படவேண்டும் என நினைக்கிறோம். இதற்கென பின்தங்கிய கிராமங்களில் விளிப்பூட்டல் திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம். கைவிடப்பட்ட சிறுவர்கள் என சிறுவர்கள் உருவாகாத ஒரு நிலமையை கட்டியெழுப்பவேண்டும். இதனால் எமது சிறுவர் கிராமத்திற்கு வெளியேயான வேலைத்திட்டங்களை மேம்படுத்திவருகின்றோம்.

Leave a comment