மாகாண சபைத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இன்று தெரியவரும்.அது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சற்று பின்னடைவை சந்திக்க நேரிட்டது. அதன் விளைவாக கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கிராம மட்டத்தில் மேற்கொள்வதில் பாரிய சவாலாக இருக்கும் என்றே நாங்கள் எண்ணியிருந்தோம்.என்றாலும் கிராம மட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட கட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின்போது கட்சி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் கட்சியுடன் இருப்பதை காணமுடிந்தது. கட்சியை பலப்படுத்துவதற்கு அவர்கள் மிகவும் ஆர்வமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அதனால் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகள் மிகவிரைவில் மேற்கொள்ளவேண்டியிருப்பதுடன் கட்சி அரசியல் தொடர்பாக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் தொடர்பாகவும் அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் கட்சி எவ்வாறு போட்டியிடுவது போன்ற விடயங்களுக்கும் தீர்வுகாணவேண்டியிருக்கின்றது. குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் விடயத்தில் புதிய தேர்தல் திருத்த முறைமைக்கு செல்வதா அல்லது பழைய முறைமைக்கு செல்வதா என்ற நிலைப்பாட்டில் கட்சி ஒரு தீர்க்கமான முடிவொன்றுக்கு வரவேண்டும்.
மாகாண சபைத் தேர்தல் முறைமையில் கட்சி உறுப்பினர்களில் ஒருசிலர் புதிய தேர்தல் திருத்தத்துக்கு அமைய தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் சிலர் பழைய முறையிலேயே நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதனால் இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தனது தீர்க்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்காக இன்று மாலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கூடவுள்ளது. இதன்போது தேர்தல் குறித்து கட்சியின் இறுதித் தீர்மானம் மேற்கொள் ளப்படும் என்றார்.