மைத்திரி நாளை அமெரிக்கா விஜயம்

294 0

my3ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக  மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு நாளை பயணமாகவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 21ஆம் திகதி மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரை நிகழ்த்தும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
ஐக்கிய நாடுகள் சபை மாநாடு இம்முறை மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடாத்தப்படுகின்றது.
இதற்கமைய, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இணைந்து நடாத்தும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான மாநாடு நிவ்யோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா நடாத்துகின்றார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து அவர் இறுதியாக கலந்துக்கொள்ளும் ஐநா மாநாடு இதுவாகும்.
அத்துடன், கடந்த 10 வருட காலமாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய பான் கீ மூன், இம்முறை மாநாட்டில் தனது இறுதி உரையை நிகழ்த்தவுள்ளார்.