மனித உரிமையை பாதிக்காத வகையில் குற்றவாளிக்கு தண்டனை – ரவி

302 0

மனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை பெற்றுகொடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் விரைவுபடுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்வு கொழும்பு வடக்கு – காக்கை தீவில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தூக்கு தண்டனை விவகாரம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. குற்றவாளிகள் தொடர்பான சரியான தகவல்கள் கண்டறியப்பட வேண்டுமானால் ஒழுங்கு முறையான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். சட்டம் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே குற்றவாளிகள் தொடர்பான உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

நாட்டில் இன்று அரசியல் நடவடிக்கைகளுக்காக பாதாள உலகத்தினரை பயன்படுத்தி கொள்வதும் பாதாள உலகத்தினர் அரசியல்வாதிகளை பயன்படுத்தி கொள்வதும் இயல்பான விடயமாக மாறிவிட்டடது. உண்மையில் இது நாட்டில் பிரச்சினையை தூண்டும் விடயமாகும். இவ் இரண்டு தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டுமானால் வலுவான நீதி நாட்டப்பட வேண்டும்.

சட்ட விரோத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இதுகுறித்து ஊடகங்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றவாளி ஒருவருக்கு பொலிஸார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது  அதனை மனித உரிமை மீறல் என ஒருசிலர் அடையாளம் காணுகின்றனர். ஆனால் தேசிய அரசாங்கத்தில் மனித உரிமைகளுக்கும் முதலிடமுள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்றால் நாட்டில் எல்லையற்ற சுதந்திரம் உள்ளதா? என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகள் பெற்று கொடுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய இரண்டுக்கும் சம உரிமை வழங்கி மக்கள் நீதியாக வாழ்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுப்பதும் அவசியமாக காணப்படுகின்றது.

இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன் நல்லாட்சி வார்த்தைகளால் மட்டுமல்லாமல் அதனை பிரயோசமுடையதாக மாற்றியமைக்க கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

Leave a comment