நான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன். அத்தோடு எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
கனேமுல்லவில் இன்று இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
´நாம் பொதுமக்களை தவிர்த்து எரிபொருள் விலை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு வரக்கூடாது. நாம் எரிபொருள் விலை அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் போது பொதுமக்களை கவனத்திற் கொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும். பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கவேண்டுமே தவிர இலாபமீட்டும் நோக்குடன் செயற்படக்கூடாது.
எனக்கு விருப்பமில்லை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மட்டுமல்ல தேசிய மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் சபை போன்ற அரச நிறுவனங்கள் இலபமீட்டும் நிறுவனங்களாக. நான் நினைப்பது அவை மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்களாகவே இருக்கவேண்டும் என்று.
இந்த நிறுவனங்கள் நட்டத்தில் சென்றாலும் நாங்கள் பார்க்கவேண்டியது மக்களுக்கு சேவையை வழங்குவதே. கடந்த தினத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை தொடர்பாக எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மக்களை மனதில் கொண்டு தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதே எனது கருத்து.
உண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எவ்வித நட்டமும் இல்லை எண்ணெய் விநியோகத்தில். எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எங்களால் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகிக்க முடியும். வரியை குறைத்தால் எண்ணெய் விலையும் குறையும்.
ஆனால் வரியையும் குறைக்க முடியாது. காரணம் அரசின் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் வரியிலேயே தங்கியுள்ளது. அமைச்சரவையும் விருப்பமின்றியே எரிபொருள் விலையை அதிகரிக்க சம்மதித்தது.
நாங்கள் அரசாங்கத்திற்கு வந்தபோது இருந்த விலையை விட தற்போது மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. நான் எதிர்பார்ப்பது எதிர்காலத்தில் மசகு எண்ணெயின் விலை குறையும் என்று´ அமைச்சர் தெரிவித்தார்.

