பதவிகளுக்காக விண்ணப்பங்கள் கோர நடவடிக்கை

297 0

அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்பட்டு, இருவர் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் பணியிலிருந்து நீங்கியதை தொடர்ந்து குறிப்பிட்ட பதவிக்கான வெற்றிடம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப்பொருள் வர்த்தகம் காரணமாக தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தார்.

இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 19 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் மேன்முறையீடு செய்யாத 13 பேர் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து வருவதுடன் அதில் வெளிநாட்டவர்கள் சிலரும் இருப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Leave a comment