நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் நோர்வூட் ரொக்வூட் மேற்பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான கிருபாகரன் சசிரேக்கா (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவத;
கடந்த 9ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட இப்பெண்ணை அடையாளம் காணும்படி வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் உறவினர்கள் நோர்வூட் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காட்டி உறுதிப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 9ம் திகதி காலை 8 மணியளவில் கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென். ஜோன்டிலரி பகுதியில் ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதிக்குத் தொழிலுக்கு சென்றவர்களால் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டு, ஹட்டன் நீதவானினால் மரண விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு, சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடையாளம் காண்பதற்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனைகளின் பின் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என உறுதி செய்ய முடியும் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

