ரெயில் நிலையத்தில் சிக்கித்தவித்த பயணிகளை மீட்கும் கடற்படை

231 0

மும்பையில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் பயணிகளை மீட்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.

நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் சுமார் 2000 பயணிகள் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் ஆளுயரத்திற்கு மழை நீர் தேங்கியிருப்பதால் அந்த ரெயில் நிலையங்களில் சிக்கியிருக்கும் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து மேற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த ரெயில் நிலையங்களுக்கு கடற்படை வீரர்கள் இன்று காலையில் விரைந்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் கடந்து செல்லக்கூடிய மிக உயரமான வாகனங்களில் வந்த அவர்கள், பயணிகளை மீட்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

Leave a comment