இடர் நிலைக்கு முன் தயார் நிலை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம்!

231 0

அனுராதபுரம் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பதன் காரணமாக ஏற்படும் வெள்ள நிலைமையை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “இடர் நிலைக்கு முன் தயார் நிலை” நிகழ்ச்சித் திட்டம் இன்று (07) முற்பகல் மல்வத்து ஓயா ஜெர்மன் பாலத்துக்கருகாமையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. 

அனர்த்தங்கள் இடம்பெறும் பிரதேசங்களில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

சேற்று மண் நிறைவதன் காரணமாக தடைப்பட்டிருந்த மல்வத்து ஓயாவில் சேற்று மண்ணை அகற்றி அதனை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் இதற்கான உடல் உழைப்பு பங்களிப்பு வழங்கப்பட்டது.

வெள்ள அனர்த்தம் இடம்பெறும் பிரதேசங்களில் ஆற்றின் இரு ஓரங்களையும் பலப்படுத்துதல், நீர் செல்லும் வழி மற்றும் வாய்க்கால் பாதைகளை சுத்தம் செய்தல், சேற்று மண்ணை அகற்றுதல் உட்பட வெள்ள அனர்த்தத்தை குறைக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் “இடர் நிலைக்கு முன்னர் தயார்நிலை” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர்களான வீரகுமார திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, வடமத்திய மாகாண ஆளுநர் எம்.பீ.ஜயசிங்க, மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment