கனடா நாட்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைகிறது ஒப்பந்தம் கையெழுத்தானது

287 0

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான வெற்றியை தொடர்ந்து, கனடா நாட்டில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக அமெரிக்கா ஹார்வர்டு தமிழ் இருக்கை குழுவை சேர்ந்த முனைவர் மு.ஆறுமுகம் கூறியதாவது:-

டொரண்டோ பல்கலைக்கழகம் கனடா நாட்டில் முதல் இடத்தையும், உலக தரவரிசையில் 10-வது இடத்தையும் பெற்று சிறந்து விளங்குகிறது. கனடாவில் 5 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் டொரண்டோ நகரில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை போன்று டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்று கனடா தமிழர் பேரவையினர் முயற்சி மேற்கொண்டனர். அவர்களுடைய முயற்சிக்கு அமெரிக்கா ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு பக்கபலமாக இருந்துவந்தது.

எங்களுடைய நீண்டநாள் முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜோர்ஜெட் சினாட்டி முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான விழா டொரண்டோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கனடா தமிழர் பேரவை பொறுப்பாளர்கள் அப்பாதுரை முத்துலிங்கம், சிவன் இளங்கோ, டாக்டர் வ.ரகுராமன், துரைராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை குழுவை சேர்ந்த டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம், புரவலர் பால்பாண்டியன், முனைவர் பாலா சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கனடா பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, ‘தமிழ் இருக்கையின் முக்கியத்துவம்’ குறித்து விளக்கி பேசினார்.

நான்(ஆறுமுகம்) நன்கொடையும், தமிழக கலை, இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனிடம் இருந்து வாழ்த்து செய்தியும் பெற்று அனுப்பினேன்.

டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 20 லட்சம் கனடா டாலர் (இந்திய மதிப்பில் ரூ.10 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரம்) தேவைப்படுகிறது. விழாவில் தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து 6 லட்சம் கனடா டாலர் (ரூ.3 கோடியே 10 லட்சத்து 49 ஆயிரம்) நன்கொடையாக பெறப்பட்டது. ஹார்வர்டு தமிழ் இருக்கை குழு 50 ஆயிரம் கனடா டாலர் நன்கொடையாக அளிக்க உள்ளது.

எனவே ஓராண்டுக்குள் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment