நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வௌியிட்ட செய்தி போன்றதொரு செய்தி 2015ம் ஆண்டு ரொய்டர்ஸ் இணையத்தளமும் வௌியிட்டிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
2015ம் ஆண்டு ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டதன் பின்னர் இது தொடர்பில் அனைவரையும் அழைத்து பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் விசாரணை செய்திருந்ததாகவும், அதன்போது கொழும்பு துறைமுக கட்டுமான பணிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகள் என்பவற்றின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
ஒன்றரை ஆண்டுகள் விசாரணை இடம்பெற்றதன் பின்னர் அவற்றின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு தடவை சீனா துறைமுக நிறுவனம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் நடவடிக்கைக்காக நிதி வழங்கியதாக கூறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது முற்றாக பொய்யானது என்றும் பிணைமுறி மோசடியை மறைப்பதற்காக இது தொடர்பில் சட்டரீதியற்ற முறையில் இயங்கும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

