ஆட்ட நிர்ணயக்காரர்களின் வருமானத்தைச் சோதனை செய்ய வேண்டும் – அர்ஜூன

248 0

இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்பெறுகின்ற தினங்களில் இந்த நாட்டில் உள்ள ரேஸ்புக்கிங் மற்றும் ஆட்டநிர்ணயம் செய்பவர்களின் வருமானத்தைச் சோதனை செய்ய வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் கிரிக்கெட் விளையாடும் காலங்களில் ஆட்டநிர்ணயம் என்பது இருக்கவில்லை. ஆனால் இன்று சூதாட்ட வியாபாரிகள் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் வந்து கிரிக்கெட்டை சீரழித்துள்ளன.

இவ்வாறான இழிவான செயல்களினால் கிரிக்கெட் விளையாட்டு கீழ்நிலைக்கு சென்றுவிட்டது. இதை நிறுத்த முடியாத நிலையில் நாம் உள்ளோம். இதற்குக் காரணம் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களே கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளனர். இதன் பிரதிபலிப்பே நாம் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றோம்.

அத்துடன் இலங்கை அணி தோல்வியடையும் போட்டி இடம்பெறுகின்ற காலங்களில் சூதாட்டக்கார்களின் வருமானத்தைக் கவனிக்க வேண்டும். இன்று கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளவர்கள் உயர் மட்டத்தில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சூதாட்டம் மற்றும் புக்கிங் காரர்களுடன் தொடர்பு வைத்திருப்பதே. இதன் காரணமாகத்தான் போட்டியில் தோல்வியும் ஆட்ட நிர்ணயமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளதாகத் தென்படுகின்றது.

எனவே ஆட்ட நிர்ணயம் செய்பவர்களின் வருமானத்தைச் சோதனை செய்ய வேண்டும் என்ற எழுத்துமூலமான கோரிக்கையொன்றை நிதியமைச்சர் மங்கள சமவீரவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment