பொது மக்களுக்காக 50 பில்லியன் ஒதுக்கீடு!

425 0

‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இதன் கீழ் பெற்றுக்கொள்ளப்படும் கடனுக்கு அறவிடப்படும் வட்டியில் பெருந்தொகையை அரசாங்கம் செலுத்துமெனவும், புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு சுயமாகத் தமது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“இந்தத் திட்டத்தின் கீழ் வர்த்தக முயற்சிகளில் ஈடுபட முன்வரும் பெண்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை நிவாரணத்திற்கு மேலும் 10 சதவீத தொகை சேர்த்து வழங்கப்படும். முப்படையைச் சேர்ந்த ஊனமுற்ற படைவீரர்கள், ஏனைய ஊனமுற்ற பொதுமக்களுக்கு இந்தக் கடன் திட்டத்தின் கீழ், 10 சதவீதத்திற்கு மேலதிகமான வட்டி நிவாரணத்தை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கத்தின் முக்கிய நான்கு வங்கிகளில் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற பெயரில் தனியான பீடம் ஒன்று ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது. நாட்டிலுள்ள ஆற்றல் மிக்க வர்த்தகர்களுக்கு புதிய பொருளாதார சக்தியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கமைவாக, எதிர்வரும் வருடங்களில், ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“தற்போது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழில்துறையினரை ஊக்குவிப்பதும் மற்றுமொரு நோக்கமாகும். இதன்கீழ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறையினருக்கு 750 மில்லியன் ரூபா வரையில் கடன் வழங்கப்படும். இவ்வாறான 15 வேலைத்திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்” எனவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

Leave a comment