1978ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றில் அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வந்தாலும், முதற்தடவையாக இம்முறை 837 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் குறித்து சரியான முறையில் அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு ,மேற்பார்வை செய்துள்ளமையையிட்டு தான் பெருமிதம் அடைவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நேற்று (18) இடம்பெற்ற அரச நிதியை கட்டுப்படுத்தலில் அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரம் குறித்து, ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்தும் செயலமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மக்களின் நிதி இது மக்களுக்காக சரியான முறையில் செலவழிக்கப்பட வேண்டும். இது சரியான முறையில் செலவிடப்படுகின்றதா? எவ்வாறு செலவிடப்படுகின்றது? அவ்வாறு செலவு செய்யாவிட்டால் ஏன் செலவு செய்யப்படவில்லையென்பது குறித்த விடயங்களை ஆராயவே அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவும், பொது வியாபாரம் தொடர்பான செயற்குழுவும் செயற்பட்டு வருகிறது.
ஆரம்ப காலங்களில் நிதி கட்டுபாடு தொடர்பாக பலவீனம் காணப்பட்டதால், இவ்வாறான அரச நிறுவனங்களின் நிதி செயற்பாடு குறித்து வெளியில் வருவதில்லை.எனினும், முன்பைப் போல தற்போதைய காலக்கட்டத்தில் நிதி மோசடி விடயங்களில் ஈடுபடமுடியாது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவற்றை வெளியில் கொண்டு வரமுடியும்.
நாம் கடந்த வருடங்களில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய பெரும்பாலான அரச நிறுவனங்கள், அரச திணைக்களங்களில் 40 சதவீத நிதி மோசடி இடம்பெற்றிருந்தது.11 வருடங்களுக்கு முன்பை இருந்ததை விட தற்போது இதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தகவல் அறியும் சட்ட மூலமும் பக்கபலமாகக் காணப்படுகின்றது.
மக்கள் நிதி மக்களுக்காக சரியான முறையில் செலவிடப்பட வேண்டுமென்பதே கணக்காய்வு செயற்குழுவின் நோக்கம். தற்போது எல்லா அரச நிறுவனங்களும் 3 மாதத்திற்கு ஒரு தடவை பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
குறித்த அரச நிறுவனங்கள் தமது கணக்குத் தொடர்பான அறிக்கைகளை குறிப்பிட்ட காலத்திலேயே முன்வைக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ஆரம்ப காலங்களில் 50 சதவீதமான நிறுவனங்கள் நிதி விடயத்தில் பலவீனமாக இருந்த நிலையில் தற்போது இது 20ஆக குறைவடைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

