பணிக்குத் திரும்பாவிடின் பதவி விலகியதாகவே அர்த்தம்!

374 0

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதென, தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு, இன்று (18) எட்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், தபால்மா அதிபர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை தினம் (19) கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தபால் நிலையங்களின் தபால் அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், அரச ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை  நிறைவேற்ற வேண்டும்” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment