தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்துள்ளார்.
மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வாறு உயிரிழந்துள்ள சிறுவர்களில் 10 பேர் இருதயத்தில் துளை, மூளை வளர்ச்சி குறைவு, அங்கவீனமான மற்றும் வெவ்வேறான நோய் காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எனக் கண்டறிப்பட்டுள்ளது.
தற்போது தென்மாகாணத்தில் இன்புளுவன்சா தொற்றுநோய் முழுமையாகக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இன்புளுவன்சா பரவுவதற்கான வாய்ப்பில்லை.
இருப்பினும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்புளுவன்சா தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது. அம் மாகாணத்தில் முழுமையாக வைரஸ் தொற்று பரவுவதைக் குறைப்பதற்கான எச்சரிக்கையும் வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

