அமெரிக்காவுக்காக சீனாவை பகைக்க கூடாது – திஸ்ஸ விதாரண

232 0

அமெரிக்காவின் நட்புறவினை  வளர்த்துக் கொள்ளும் நோக்கில்  சீனாவை பகைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தேசிய  அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் சூத்திரதாரியாக அமெரிக்காவே செயற்படுகின்றது என  பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில்  இலங்கை அரசாங்கம் ஏமாற்றி விட்டது என்று சீன நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. மறுபுறம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் உள்ளக விடயங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளது என்று தேசிய அரசாங்கம் குறிப்பிடுகின்றது. துறைமுகத்திற்கு வெளிப்புறத்தில் செயற்கை துறைமுகத்தினை உருவாக்கி அதற்கு உரிமை கொண்டாடுவது தொடர்பில் தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளது.

துறைமுகத்தினை சீன நிறுவனத்திற்கு 90 வருடத்திற்கு வழங்கும் போது அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும், ஆனால் தேசிய அரசாங்கம் செயற்கை தீவு தொடர்பில் எவ்வித விடயங்களும் குறிப்பிடப்படவில்லை என்று  குறிப்பிடுவது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்காவின் ஆதிக்கமும் இவ்விடயத்தில் மறைமுகமாக காணப்படுகின்றது.

உலக பொருளாதார  நாடுகளில் இன்னும் 10 ஆண்டுகளில் சீனாவே முன்னணியில் இருக்கும் என்று சர்வதேச ஆய்வுகள் கருத்து கணிப்புக்களை குறிப்பிட்டுள்ளது. சீனாவின் முன்னேற்றங்களை  தடுக்கவே அமெரிக்கா இலங்கையினை ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றது. சீனாவிற்கும் இலங்கைக்கும் வரலாற்று ரீதியிலான நல்லுறவுகள் காணப்பட்டு வருகின்றது. ஆனால் அமெரிக்காவுடன் இலங்கை இதுவரை காலமும் வர்ததக ரீதியிலான தொடர்புகளை மேற்கெண்டதில்லை.

ஆகவே தேசிய அரசாங்கம் அமெரிக்காவின் உறவினை வலுப்படுத்தி கொள்ள சீனாவின் உறவினை  முறித்துக் கொள்ள கூடாது. சில வேளை அவ்வாறு இடம்பெற்றால் இது பாரிய பொருளாதார மற்றும்  அபிவிருத்தி ரீதியிலான பிரச்சினைகளை இலங்கைக்கு ஏற்படுத்தும் என்றார்.

Leave a comment