கர்நாடகத்தில் வன்முறை அதிகரிப்பு-கட்டுப்படுத்துமாறு கோரி தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் (காணொளி)

485 0

kavery-riverஇந்தியாவில் காவிரி விவகாரத்தால், கர்நாடக மாநிலத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் தமிழக பதிவெண் உடைய 75க்கும் மேற்பட்ட பேரூந்துகள் மற்றும் வாகனங்களையும், தமிழர்கள் நடத்தும் உணவகங்களையும் கன்னட அமைப்பினர் தீ வைத்து எரித்தனர்;. தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு நகரங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘காவிரியிலிருந்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என, உச்ச நிதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி நீர்ப் பகுதி விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்மையில் மாநிலம் தழுவிய, ஹர்தால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர், கன்னட இளைஞர்களால் தாக்கப்பட்டார்.

இச்சம்பவம்  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, தமிழகத்தின் சென்னையில் உள்ள உட்லேண்ட்ஸ் விடுதி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுடன், அங்கிருந்த கர்நாடக பதிவு எண் உடைய வாகனங்களும் தாக்கப்பட்டன.
கோயம்புத்தூர்,  ராமேஸ்வரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில், கர்நாடக வாகனங்கள் தாக்கப்பட்டன. இந்த சம்பவங்களை, கன்னட, ‘தொலைக்காட்சி’ நிறுவனங்கள் ஒளிபரப்பியதால், கோபமடைந்த கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் ஓடிக் கொண்டிருந்த, நிறுத்தப்பட்டிருந்த தமிழக பதிவு எண் உடைய வாகனங்களை தேடித் தேடி, தாக்கினர்.
இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனு விசாரணைக்கு வந்தபோது, வரும், 20ஆம் திகதி வரை, தினமும், 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் கன்னட அமைப்பினர், மேலும் தீவிரமாக தாக்குதலை ஆரம்பித்தனர்.
பெங்களுரில் தமிழர்கள் நடாத்தும் தொலைபேசி நிலையங்கள், உணவகங்கள், இரும்பு தொழிற்சாலை, மளிகை குடோன் மற்றும் தமிழர்களின் வர்த்தக நிறுவனங்கள் எனப் பல இடங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. சில இடங்களில், பூட்டிய கடைகளை திறந்து, தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. மைசூரிலும், தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
பெங்களுரு நாயண்டஹள்ளி பகுதியில் உள்ள, கே.பி.என்., நிறுவனத்துக்கு சொந்தமான போக்குவரத்து சாலையில் இருந்த, ஏசி வசதி உடைய, 24 பேருந்துகள், 18 சாதாரண பேரூந்துகள், ஊழியர்களை அழைத்து வரும் ஒரு வேன் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட பாரவூர்திகள், இரு சக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால், பெங்களுரு, மாண்டியா, மைசூரின் சில பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து,  உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், அவசர ஆலோனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநிலம் முழுவதும், 27 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்புக்காக, 10 மத்திய ரிசர்வ் படை, 182 கர்நாடக ரிசர்வ் படை மற்றும் சிவில் பொலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை  தமிழகத்துக்கு செல்ல வேண்டிய, 450க்கும் மேற்பட்ட, கே.எஸ்.ஆர்.டி.சி., பேரூந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல்,  பெங்களூரு நகரின், பி.எம்.டி.சி., பேரூந்துகள்;, பெங்களூரு — மைசூரு இடையேயான பேரூந்துகளும் இயக்கப்படவில்லை. போராட்டம் தீவிரமடைந்ததால், மெட்ரோ ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை  கலைப்பதற்காக, பெங்களுரின் சில இடங்களில் வன்முறையாளர்கள் மீது, துப்பாக்கிச் சூடு, தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டும் வீசப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில், மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பெங்களுர்  அருகே, ஹெக்கனஹள்ளி என்ற இடத்தில், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொலீசார் மீது, வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். பொலிஸ் வாகனத்துக்கும் தீ வைத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த பொலீசார் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில், ஆறு பேர் காயமடைந்தனர்.
இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தமிழகத்தில் கன்னடம் பேசும் மக்களுக்கோ, அவர்களின் சொத்துகளுக்கோ எந்த சேதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கை பராமரிக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், கர்நாடகாவில் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. தமிழ் பேசும் மக்கள் மீதும், அவர்களின் சொத்துகள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழக பதிவெண் கொண்ட, 40 பஸ்களும், 40 லாரிகளும் எரிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் ஓட்டல்களும், உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும், அவர்களின் உடைமைகளுக்கும், உரிய பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். அவர்களுக்கு எதிரான வன்முறை நடக்காமலிருக்க, அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.