மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும். அறிக்கையில் இல்லாத ஒரு காரணியை என்னிடம் வினவினால் அதற்கு என்னால் எவ்வாறு பதில் கூற முடியும், இந்த விடயத்தில் என்னிடம் பதில் இல்லை என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று காலை சபை கூடிய வேளையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ரஞ்சத் டி சொய்சா ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவுடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் பணம் பெற்றதாக எம்மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகங்களில் விமர்சிக்கின்றனர்.
இதனால் மக்கள் எம்மையும் கள்ளர், ஊழல் வாதிகள் என கருதி எம்மை நிராகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சபாநாயகார் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு யார் உண்மையில் பணம் பெற்றவர்கள் என்ற காரணிகளை சபையில் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் கூறிய சபாநாயகர் கரு ஜெயசூரிய:
அர்ஜுன அலோசியஸின் நிறுவனங்களில் பணம் பெற்றதாக எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரதும் பெயர் இல்லை, மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லாத ஒரு விடயத்தை எவ்வாறு நான் சபையில் தெரிவிப்பது.
மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட நிறுவனங்களிடம் பணம் பெற்றதாக 118 பேரின் பெயர்கள் உள்ளதாகவும் 166 பேர் காசோலை பெற்றனர் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அந்த விபரங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளது.
இந்த விடயம் குறித்து சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருடன் நான் தொடர்புகொண்டு வினவினேன். அவ்வாறான எந்தவொரு அறிக்கையிலும் இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தி எனக்கு தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே நான் சபையில் தெரிவித்தேன்.
மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் அவ்வாறு எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில், எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும். அறிக்கையில் இல்லாத ஒரு காரணியை என்னிடம் வினவினால் அதற்கு என்னால் எவ்வாறு பதில் கூற முடியும், இந்த விடயத்தில் என்னிடம் பதில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

